ஏப்ரல் 9 – இனி வரும் காலங்களில் கணிப்பொறிகளுக்கும், திறன்பேசிகளுக்கும் விடை கொடுக்கும் விதமாக, ஆர்டிபிசியல் இண்டெலிஜன்ஸ் (Artificial Intelligence – AI) என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் களம் இறங்குகிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.
பெரிய நிறுவனங்களிலும், பணி நிலையங்களிலும் மட்டுமே பயன்படுத்தி வந்த கணிப்பொறி மற்றும் செல்பேசிகளின் தொழில்நுட்பங்களை கடைக்கோடி பயனாளருக்கும் அறிமுகப்படுத்திய பெருமை மைக்ரோசாஃப்ட், கூகுள் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்களையே சாரும்.
இந்நிலையில் இந்நிறுவனங்களுக்குள் ஏற்பட்ட தொழிற்போட்டியினால் பயனர்களுக்கு பயன்படும் வகையில் பல தொழில்நுட்பங்கள் கண்டறியப்பட்டன. அந்த வரிசையில் இந்நிறுவனங்கள் தற்போது ‘Artificial Intelligence’ தொழில்நுட்பத்தில் அடி எடுத்து வைத்துள்ளன.
இது குறித்து மைக்ரோசாஃப்ட் ஆராய்ச்சி நிர்வாகி யோராம் யாகோபி கூறுகையில்,
“ஆர்டிபிசியல் இண்டெலிஜன்ஸ் தொழில்நுட்பத்தில், பயனர்கள் எந்தவொரு கருவிகளையும் பயன்படுத்தத் தேவையில்லை.பயனர்களின் தேவைகளை உணர்வுகள் மூலம் அறிந்து கொள்ளும் இந்த தொழில்நுட்பம், அதற்குத் தகுந்தாற்போல் செயல்படும். மேலும் பயனர்களுக்கும், இந்த தொழில்நுட்பத்திற்கும் இடையே எந்தவொரு இடைமுகமும், இடைவினையும் தேவையில்லை” என்று கூறியுள்ளார்.
ஆப்பிள் நிறுவனமும், கூகுள் நிறுவனமும் முன்பே இந்த தொழில்நுட்பத்தில் பயணித்து வருகின்றன.
ஆப்பிளின் ‘பாஸ்புக்’ மற்றும் கூகுளின் ‘கூகுள் நவ்’ என்ற இரு தொழிநுட்பங்களும் ஆர்டிபிசியல் இண்டெலிஜன்ஸ் வகையைச் சார்ந்தது.