ஆப்கானிஸ்தான், ஏப்ரல் 9 – ஆப்கானிஸ்தானில் அதிபராக உள்ள ஹத்கர் சாய் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து கடந்த சனிக்கிழமை, அங்கு அதிபர் தேர்தல் நடந்தது.
தேர்தலை நடைபெறாமல் தடுக்க தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் மற்றும் மிரட்டல்களையும் மீறி பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
12 மில்லியன் வாக்காளர்களில், 7 மில்லியன் வாக்குகள் பதிவாகியுள்ளதாக ஆப்கானிஸ்தான் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி வருகிற 24–ஆம் தேதி வரை நடக்கும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா முன்னணி வகிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
காபூல் வாக்குசாவடிகளில் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. ஆனால் இந்த முடிவை இவருக்கு அடுத்தப்படியாக முன்னணிலை வகிக்கும் அஷ்ரப்கானி அகமதுஷாய் மற்றும் ஷல்மை ரஸ்சூல் ஆகியோர் எதிர்த்துள்ளனர்.
தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அதனால் தாங்கள் இந்த தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் நூர்முகமது நூர் கூறுகையில்,”தேர்தல் நியாயமான முறையில் நடந்ததுள்ளது. மேலும் வாக்குசாவடிகளில் தொடர்ந்து ஓட்டு எண்ணும் பணி நடந்து வருகிறது” என்று கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அரசியல் அமைப்புச் சட்டப்படி, 50 சதவீதம் ஓட்டுகள் பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். அவ்வாறு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், எதிர்வரும் மே மாதத்தில், இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும்.