ஆஸ்திரேலியா, ஏப்ரல் 10 – இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களை விரைந்து நடத்த வேண்டும் என இலங்கை அரசாங்கத்திடம் ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜுலி பிஷப் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பல்வேறு விரும்பத் தகாத சம்பவங்கள் இடம்பெற்றதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இலங்கை வரலாற்றில் ஏற்பட்டுள்ள இந்த இருண்ட அத்தியாயத்தில் இருந்து வெளிப்பட்டு, சமுதாயத்தின் அனைத்து துறைகளிலும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வண்ணம் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தமிழர்கள் வாழும் பிராந்தியத்திற்கு அதிகாரப் பகிர்வு, குற்றச் செயல்கள் தொடர்பான சுதந்திரமான விசாரணை, வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தைத் திரும்பப்பெறுதல் உள்ளிட்ட விஷயங்களும் வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தின் வழிகாட்டல் பேரில் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது குழுவினர், இலங்கையின் யுத்தம் நடந்த பகுதிகளுக்கு பயணம் செய்திருந்ததாக, ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான முன்னாள் செய்தித்தொடர்பாளர் கோர்டன் வைஸ் குற்றம் சுமத்தியிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள ஜுலி பிஷப், தான் இராணுவத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை எனவும், யுத்தம் நடந்த பகுதிகளுக்கு தானாகவே பயணம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்
மேலும் அவர் இலங்கையை தனிமைப்படுத்தியோ தண்டனை விதித்தோ நல்லிணக்க முனைப்புக்களை மேற்கொள்ள முடியாது, மாறாக ஒற்றுமையின் மூலமாகவே பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.