ஏப்ரல் 10 – உலகின் மிகப் பிரபலமான ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்பாக திறன் கைக்கடிகாரங்களை (iWatchs) வரும் மூன்றாம் காலாண்டில் அறிமுகப்படுத்த இருப்பதாக ஆரூட செய்திகள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.
ஐபோன் மற்றும் ஐபேட் உதவி இல்லாமலும் தனித்து இயங்கும், இந்த ஐவாட்ச் (iWatch) -ன் சிறப்பான செயலிகள் ஐஒஎஸ் இயங்குதளத்தின் அடிப்படையில் செயல்படும் என்றும் கூறப்படுகின்றது.
பயனர்களுக்கு மிகச்சரியாக பொருந்தும் வகையில் 1.3 முதல் 1.5 அங்குல திரையை கொண்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நெகிழ்வுத்தன்மை கொண்ட இதன் AMOLED திரை, ‘sapphire cover’ மற்றும் உருக்கு உலோகங்களால் ஆன இதன் வெளிப்புற அமைப்பு வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தோற்றப் பொலிவை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகின்றது.
ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக சாம்சங் மற்றும் எல்ஜி நிறுவனங்கள் தங்கள் திறன் கைக்கடிகாரங்களை தயாரிக்க களம் இறங்கினாலும் தொழிநுட்பம் மற்றும் வெளிப்புறத் தோற்றத்தின் அடிப்படையில் ஆப்பிளின் கையே ஓங்கும் என நம்பப்படுகிறது.
இந்த வருடத்தில் மட்டும் சுமார் 5.5 மில்லியன் ஐவாட்ச் (iWatch) -களை விற்பனை செய்ய ஆப்பிள் முடிவு செய்துள்ளதாகவும் பல முன்னணி தொழில்நுட்ப இணையத்தளங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.