Home நாடு பூமிபுத்ரா மாணவர்களைப் போன்றே இந்திய மாணவர்களையும் நடத்துங்கள் – கல்வி அமைச்சுக்கு டத்தோ ஹென்ரி...

பூமிபுத்ரா மாணவர்களைப் போன்றே இந்திய மாணவர்களையும் நடத்துங்கள் – கல்வி அமைச்சுக்கு டத்தோ ஹென்ரி அறைகூவல்

577
0
SHARE
Ad

Henry Penang 300 x200பினாங்கு, ஏப்ரல் 11 – “சில வருடங்களுக்கு முன்பு இந்திய மாணவர்களுக்கு 1,500 மெட்ரிகுலேஷன் இடங்கள் வழங்கப்படும் என்ற இந்திய சமுதாயத்திற்கு மகிழ்ச்சி தரும் உறுதி மொழியை நமது பிரதமர் வழங்கினார்.ஆனால் இந்த 1500 இடங்களை நிரப்புவது என்பது ஆண்டுதோறும் பெரும் பிரச்சனையாகவும் சர்ச்சையாகவும் உருவெடுத்து வருகின்றது. இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன்ஸ் என்பது வெறும் கண்துடைப்பாக – உதட்டில் இனிப்பைத் தடவி விட்டு,  உள்ளத்தில் கசப்பை ஏற்படுத்தும் விதத்தில் – கல்வி அமைச்சும் அரசாங்கமும் இனியும் செயல்படக் கூடாது. மாறாக, இந்திய சமுதாயத்திற்கான அனைத்து 1,500 இடங்களும் நிரப்பப்படுவதை அனைத்துத் தரப்புகளும் உறுதி செய்ய வேண்டும்” என ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினரும், பினாங்கு மாநில ம.இ.கா தொடர்புக் குழுவின் பொருளாளருமான டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம் அறைகூவல் விடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

இன்று பத்திரிக்கைகளுக்கு விடுத்த அறிக்கையொன்றில் டத்தோ ஹென்ரி மேலும் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:

“அண்மையில் வெளியான தகவல்களின்படி 6,100 இந்திய மாணவர்கள் மெட்ரிகுலேஷன்ஸ் இடங்களுக்கு விண்ணப்பித்திருப்பதாகவும் ஆனால் அவர்களில் 352 மாணவர்கள் மட்டும்தான் தகுதிகளைக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.”

“முதலில் அரசாங்கம் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்திய மாணவர்கள் மிகவும் பின்தங்கிய சூழ்நிலைகளில் பல்வேறு குடும்ப, சமூகப் போராட்டங்களுக்கு இடையில் தங்களின் கல்வியைத்தொடர்ந்து வருகின்றனர். சீனர்களைப் போன்று வசதி படைத்த சமுதாயமாக நாம் இல்லை. பூமி புத்ரா மாணவர்களுக்கு அரசாங்கம் அள்ளிக் கொடுக்கும் சலுகைகள் போன்று நமக்கு எதுவும் வழங்கப்படுவதும் இல்லை. எனவே இதுபோன்ற பின்னணிகளைக் கருத்தில் கொண்டு நமக்குக் கிடைக்கும் ஒரு சில சலுகைகளுள் ஒன்றான மெட்ரிகுலேஷன்ஸ் வாய்ப்பில் கடுமையான விதிமுறைகளை அரசாங்கம் பின்பற்றக்கூடாது”

1,500 இடங்களையும் நிரப்புங்கள்

“10 ஏ எடுத்தவர்களுக்குத்தான் மெட்ரிகுலேஷன்ஸ் என்றால் முதல் வாய்ப்பை அவர்களுக்கு வழங்கி விட்டு, அடுத்து 9 ஏ பெற்றவர்களைக் கொண்டு இடங்களை நிரப்புங்கள். அதன்பிறகும் இடங்கள் எஞ்சி இருக்கின்றன என்றால், 8 ஏ, 7 ஏ, பெற்றவர்களைக்கொண்டு அந்த இடங்களை நிரப்புங்கள். இப்படிச் செய்வதன் மூலம் இந்திய மாணவர்களுக்கான எல்லா 1,500 இடங்களையும் அரசாங்கம் முழுமையாக நிரப்ப வேண்டும்” என்று கேட்டுக் கொண்ட டத்தோ ஹென்ரி “இதைத்தானே அரசாங்கம் மலாய்க்கார மாணவர்களுக்கும், பூமிபுத்ரா சலுகைகள் என்ற பெயரில் ஆண்டு தோறும் செய்து வருகின்றது. பிறகு ஏன் இந்திய மாணவர்களுக்கு மட்டும் செய்யக் கூடாது?”என்றும் தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

“ஏழையோ, பணக்காரனோ, எல்லா மாணவர்களும் கஷ்டப்பட்டுத்தான், 10 ஏ எடுக்க வேண்டும் என்ற கனவுகளோடுதான் படிக்கின்றார்கள். பரிட்சைகளில் அமர்கின்றார்கள். ஆனால், தேர்வு முடிவுகளில் ஓரிரு ஏ குறைத்து எடுத்து விட்டதற்காக அவர்களை முட்டாள் மாணவர்கள் என்று ஒதுக்கித் தள்ளக்கூடாது. 1,500 இடங்கள் என்று அறிவித்து விட்டு, பின்னர் எஞ்சிய இடங்கள் இருந்தால் இதுபோன்ற அடுத்த நிலை மாணவர்களுக்கும் நாம் வாய்ப்புத்தர வேண்டும். அதுதான் நியாயமானதும், முறையானதும் ஆகும்”

இந்த முறை சம்பந்தப்பட்ட ம.இ.கா தலைவர்களும் துணைக் கல்வி அமைச்சராக இருக்கும் கமலநாதனும் இதனை உறுதி செய்ய வேண்டும் என்றும் டத்தோ ஹென்ரி கேட்டுக் கொண்டார்.

1 மலேசியா கொள்கை மக்களை ஏமாற்றும் கொள்கையாக இருக்கக்கூடாது.

“நாட்டில் ஏதாவது தேசியப் பிரச்சனை ஏற்பட்டால், ஏதாவது பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டால், உடனே எல்லாரும் இன, மத பேதமின்றி ஒன்றுபட வேண்டும் என அரசாங்கத் தலைவர்கள் அறைகூவல்கள் விடுக்கின்றனர். ஆனால் பின்னர் குறிப்பாக இந்திய சமுதாயத்திற்கு ஏதாவது பிரச்சனை என்றால், இது அவர்களின் சமூகப் பிரச்சனை என்ற ரீதியில் எல்லா அரசாங்கத் தலைவர்களும் ஒதுங்கிக்கொண்டு விடுகின்றனர். இதுதான் ஒரே மலேசியா கோட்பாடா? இதுதான் தேசிய முன்னணி இந்திய சமுதாயத்தின் மீது காட்டும் அக்கறையா?” என்றும் தனது அறிக்கையில் டத்தோ ஹென்ரி வினவினார்.

“இனிமேலும் ஒரே மலேசியா கோட்பாடு என்றால் அது அனைவரையும் சமமாகப் பார்ப்பது, அனைத்து இனத்தவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவது, மற்ற இனப் பிரச்சனைகளையும் தனது பிரச்சனையாகப் பார்ப்பது, ஓர் இனத்திற்கு வழங்கப்படும் சலுகைகளை, வாய்ப்புகளை மற்ற இனங்களுக்கும் வழங்குவது என்ற ரீதியில் இனியாவது அரசாங்கம் செயல்பட வேண்டும். அந்த வகையில் அணுகி, 1,500 இடங்களையும் இந்திய மாணவர்களுக்கு என எப்படி வழங்குவது என்பது குறித்து அரசாங்கமும், ம.இ.காவும் உடனடி நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்” என்றும் டத்தோ ஹென்ரி குறிப்பிட்டுள்ளார்.