மெல்போர்ன், பிப்.15- வரும், 2020ம் ஆண்டிற்குள், ஆஸ்திரேலியாவிற்கு வரும், இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை, இரண்டு மடங்காக அதிகரிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என, ஆஸ்திரேலிய சுற்றுலா துறையின் நிர்வாக இயக்குனர் ஆன்ட்ரூ மெக்எவாய் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது, தற்போது, ஆஸ்திரேலிய சுற்றுலா துறை சந்தையில், இந்தியா எட்டாவது மிகப்பெரிய நாடாக விளங்கு கிறது.
இதனை எடுத்துக்காட்டும் வகையில், சென்ற, 2012ம் ஆண்டில், ஆஸ்திரேலியா வரும், இந்தியா சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 7.4 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,59,200 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இவர்கள், 71.60 கோடி டாலரை, ஆஸ்திரேலியாவில் செலவிட்டுள்ளனர். எனவே, வரும், 2020ம் ஆண்டிற்குள், இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 3 லட்சமாகவும், அவர்கள் செலவிடும் தொகை, 230 கோடி டாலராகவும் உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இது, வரும், 2020ம் ஆண்டிற்குள், ஆஸ்திரேலியா சுற்றுலா துறை எட்ட நிர்ணயித்துள்ள, 14 ஆயிரம் கோடி டாலரை அடைய, மிக ஏதுவாக இருக்கும்.
குறிப்பாக, ஆசிய நாடுகளில் இருந்து, சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கையை, இரண்டு மடங்காக உயர்த்த, நீண்ட கால ஊக்குவிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.இவ்வாறு, ஆன்ட்ரூ கூறினார்.