நியூயார்க், ஏப்ரல் 14 – ஐ.நா. சபைக்கான ஈரானின் தூதுவராக தேர்ந்து எடுக்கப்பட்ட ஹமீத் அபுதாலெபிக்கு (படம்) விசா வழங்க முடியாது என அமெரிக்க தெரிவித்துள்ளது.
கடந்த 1979–ம் ஆண்டு அமெரிக்கர்கள் 52 பேரை, ஈரானின் முஸ்லிம் மாணவர் அமைப்பினர் டெக்ரானில் பணயக் கைதிகளாக 444 நாட்களுக்கு பிடித்து வைத்து இருந்தனர். அந்த அமைபினர்களில் ஒருவர் தான் ஹமீத் அபுதாலெபி என்று அமெரிக்கா கூறிவருகிறது.
ஐ.நா. சபையின் தலைமையகம் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. அங்கு செல்ல வேண்டுமெனில் அமெரிக்காவின் விசா அவசியம் தேவை. எனவே அமெரிக்கா, தனது குடிமக்களை சிறைபிடிக்க காரணமாக இருந்ததாக கூறி ஹமீத் அபுதாலெபிக்கு விசாவை வழங்க மறுத்துவிட்டது.
இதுகுறித்து ஈரானுக்கு அறிவுறுத்திய அதிபர் ஒபாமாவின் நிர்வாகம், தங்கள் நாட்டின் பாதுகாப்பு கருதி ஹமீத் அபுதாலெபியிக்கு விசா வழங்க முடியாது என்றும் அவரின் பெயரை திரும்பப் பெறும்படி வற்புறுத்தியுள்ளது.
இந்த நிலையில் இது குறித்து ஹமீத் அபுதாலெபி கூறுகையில், ‘‘விசா தர மறுக்கும் அமெரிக்காவின் முடிவு வருத்தம் அளிக்கிறது. சர்வதேச விதிமுறைகளின்படி தனது பிரதிநிதி ஒருவரை ஐ.நா. சபைக்கு அனுப்பி வைக்கும் உரிமை ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகளுக்கு உள்ளது’’ என்று கூறியுள்ளார்.
இது குறித்து பதில் அளித்துள்ள ஈரான் அரசு, அமெரிக்காவின் முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்துக்குச் செல்வதற்கு அரசியல் ரீதியிலும், அனைத்து வகைகளிலும் ஹமீத் அபுதாலெபி தகுதியானவரே என்று கூறியுள்ளது.
மேலும் இவருக்குப் பதிலாக இன்னொரு தூதுவரை நியமிக்க முடியாது எனவும் திட்டவட்டமாக ஈரான் அறிவித்துள்ளது.