கொழும்பு, ஏப்ரல் 14 – இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த இறுதி கட்டப் போரில் சரண் அடைந்த வீரர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
இலங்கையின் இந்த செயலினை ஆராய்ந்த ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை, போர்குற்றம் தொடர்பாக சர்வதேச நீதிவிசாரணை வேண்டும் என பரிந்துரைத்தார். அமெரிகாவும் இவரின் கோரிக்கையினை வலியுறுத்தியது.
இதனை அடுத்து மனித உரிமை மீறல் தொடர்பாக இலங்கைக்கு எதிரான சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்தி, பல்வேறு நாடுகளிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான இந்த சர்வதேச நீதி விசாரணை எதிர்வரும் ஜுன் மாதம் முதல் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித்தொடர்பாளர் ஒருவரை மேற்கோள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த விசாரணையை மேற்கொள்வதற்கான நிபுணர்கள் குழு எதிர்வரும் மே மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை நடத்த இருக்கும் மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு , சர்வதேச சட்டங்களையும், மனிதாபிமான சட்டங்களையும் நன்கு அறிந்த, கடந்த காலத்தில் சிறந்த நற்பெயரைக் கொண்டவர்களாக தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.