திருப்பூர், ஏப்ரல் 14 – திருப்பூர் காங்கயம் ரோடு ராக்கியாபாளையம் பிரிவில் திறந்த வேனில் நின்றபடி பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்ததார். அப்போது அவர் பேசியதாவது,
விஜயகாந்தை ஏமாற்றிய அதிமுக-வுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். ஜெயலலிதா ஆட்சி அமைக்கும்போது, திருப்பூரின் சாயப்பட்டறை பிரச்சனைக்கு ஒரு குழு அமைத்து, அவர்களை குஜராத்துக்கு அனுப்பி தீர்வு காண்பதாக கூறினார்.
ஆனால் இதுவரை செய்யவில்லை. தமிழகம் மின்வெட்டு, தண்ணீர் பிரச்சனையில் சிக்கி தவிக்கிறது. 320 தொகுதியில் வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமராக வருவார். மோடியை பிரதமராக்கி தமிழகத்தை நல்லரசாகவும், இந்தியாவை வல்லரசாகவும் மாற்றுவோம்.
விஜயகாந்த் 3 ஆண்டுகளுக்கு முன் இதே ஏப்ரல் 13-ஆம் தேதி தான் தெரியாத்தனமாக அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தார். ஆனால் அ.தி.மு.க. அவரை ஏமாற்றி விட்டது.
எந்த காரணம் கொண்டும் அ.தி.மு.க.வுடன் இனி கூட்டணி வைத்து ஏமாற மாட்டோம். அ.தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட வேண்டும்.
தேர்தலுக்கு பின்பு பாரதீய ஜனதாவுடன் கூட்டணி சேரும் ஜெயலலிதாவின் திட்டம் பலிக்காது.
தற்போது பாரதீய ஜனதா கூட்டணியில் இருப்பவர்கள் தான் கடைசிவரை இருப்பார்கள். கட்டாயம் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். இந்த தொகுதி நேரடியாக பிரதமரின் கண்காணிப்பில் இருக்கும்.
தற்போது மின்வெட்டு பிரச்சனையால் திருப்பூரில் தொழில்கள் அனைத்தும் வெளி மாநிலங்களுக்கு சென்றுவிட்டன. தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்றுவோம். தங்க நாற்கர சாலைகள் அமைக்கப்பட்டதுபோல் நதிகள் அனைத்தும் இணைக்கப்படும்.
திருப்பூரில் உள்ள தொழிற்சாலைகளை மேம்படுத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம். குஜராத்தை போல் சாயப்பட்டறை கழிவுநீரை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கப்படும். அத்துடன் அந்த நீரை சுத்திகரித்து விவசாயத்துக்கும் தரப்படும்.
சட்டம்- ஒழுங்கில் தமிழகம் தான் கடைசியில் இருக்கிறது. டாஸ்மாக் விற்பனையில் முதலிடத்தில் திருப்பூர் இருக்கிறது. இதற்கு இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாததே காரணம்.
திருப்பூரின் தொழில் வளத்தை பாதுகாத்து திருப்பூரை குஜராத்போல் மாற்ற மோடியை பிரதமர் ஆக்குவோம் என பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.