சென்னை, ஏப்ரல் 17 – தன்னை மறு வாக்கு எண்ணிக்கை அமைச்சர் என்று கூறிவரும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை ‘என்கவுன்டர்’ முதல்வர் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்தார்.
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி ஒவ்வொரு கூட்டத்திலும் ‘ரீ-கவுன்டிங் மினிஸ்டர்’ என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை விமர்சித்து வருகிறார். குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடாததில் இருந்தே மறு வாக்கு எண்ணிக்கை அமைச்சர் அச்சத்தில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது என மோடி சாடி வருகிறார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும் போது மோடியின் இந்த விமர்சனம் குறித்து கேட்டதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், “மோடி ஏராளமான பொய்களைக் கூறுபவர். சிவகங்கையில் மறு எண்ணிக்கை நடக்கவில்லை. அது அவருக்குத் தெரியும். அப்படி இருந்தும் அவர் பொய் பேசுகிறார். அவர் மீண்டும் மீண்டும் மறு வாக்கு எண்ணிக்கை அமைச்சர் என்று அழைத்தால், நான் அவரை என்கவுன்டர் முதல்வர் என்று அழைப்பேன்” என்றார்.
குஜராத்தின் போலி என்கவுன்டர் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே, மோடியை என்கவுன்டர் முதல்வர் என அழைப்பதாக ப.சிதம்பரம் கூறியிருக்கிறார்.