மும்பை, ஏப்ரல் 17 – இந்தி படவுலகில் பா.ஜ. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு அலை கிளம்பி உள்ளது.
இதையடுத்து பாலிவுட் 2 அணியாக உடைந்தது. நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதற்கிடையில் பல மாநிலங்களில் வாக்கு பதிவும் நடந்து வருகிறது.
இன்று 5ம் கட்டமாக 121 தொகுதிகளில் வாக்கு பதிவு நடக்கிறது. தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு சினிமா நடிகர், நடிகைகள் களத்தில் இறங்கி உள்ளனர். காங்கிரசுக்கு ஆதரவாக நக்மா, ராஜ் பப்பர், கோவிந்தா உள்ளிட்டவர்கள் பிரசாரம் செய்கின்றனர்.
பா.ஜ சார்பில் நடிகை ஹேமமாலினி, வினோத் கன்னா, இசை அமைப்பாளர் பப்பி லஹரி, டிவி நடிகை ஸ்மிருதி ராணி போன்றவர்கள் போட்டியிடுகின்றனர். இதையடுத்து பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பா.ஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, பாலிவுட் நடிகர் சல்மான் கானை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். ஆனால், மோடிக்கு ஆதரவு, எதிர்ப்பு என 2 அணிகளாக இந்தி படவுலகம் பிளவுபட்டு நிற்கிறது.
நடிகை நந்திதா தாஸ், பாலிவுட் இயக்குனர்கள் இம்தியாஸ் அலி, விஷால் பரத்வாஜ், கோவிந்த் நிஹலானி, சயீத் மிஸ்ரா, சோயா அக்தர், கபிர் கான், மகேஷ் பட், சுபா முத்கல், அதிதி ராவ் ஹைத்ரி உள்ளிட்டோர் இணைந்து வாக்காளர்களுக்கு பகிரங்க கடிதம் எழுதி உள்ளனர்.
அதில், நாட்டையும், தேச ஒற்றுமையையும் காக்க வேண்டிய தருணம் வந்திருக்கிறது. லஞ்சம், நிர்வாகம் போன்றவை முக்கிய விஷயங்களாக இருந்தாலும் மக்களின் ஒற்றுமையும் அவர்களது பாதுகாப்பும் மிக முக்கியம்.
ஒன்று மட்டும் உறுதி, இந்திய மக்களின் சகோதரத்துவம் எந்த வகையிலும் பிளவு படுத்த முடியாதது. இந்திய பிரஜைகளாக நாம் அனைவரும் இந்தியாவை நேசிக்கிறோம்.மதச் சார்பற்ற கட்சிக்கு உங்கள் வாக்குகளை பதிவு செய்யுங்கள் என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.