ஏப்ரல் 19 – கார் விபத்தில் அகால மரணமடைந்த புக்கிட் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் கர்ப்பால் சிங்கின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் போது அவருக்கு பினாங்கு மாநிலத்தின் அதிகாரத்துவ இறுதி மரியாதைகள் வழங்கப்படும் என பினாங்கு முதல்வர் லிம் குவான் அறிவித்துள்ளார்.
பல தவணைகளாக, பினாங்கு மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர் கர்ப்பால் என்பதோடு, பினாங்கு மாநிலத்தை ஆளும் ஜனநாயக செயல் கட்சியின் தலைவர் அவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாநில அதிகாரத்துவ அந்தஸ்துடன் கூடிய இறுதி மரியாதைகளுக்காக அவரது நல்லுடல் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் காலை 11 மணிவரை லைட் ஸ்ட்ரீட்டிலுள்ள (Light Street) டேவான் ஸ்ரீ பினாங்கு (Dewan Sri Pinang) மண்டபத்தில் வைக்கப்பட்டு அதிகாரத்துவ நிகழ்வுகள் நடைபெறும்.
அன்னாரது நல்லுடலுக்கு பினாங்கு மாநிலக் கொடியும் போர்த்தப்படும் என்றும் லிம் குவான் எங் கூறினார்.
அதன் பின்னர் அவரது நல்லுடல் பினாங்கு பத்து கந்தோங் மயானத்திற்கு கொண்டு செல்லப்படும்.
அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் நேரத்தில் ஜசெகவின் எல்லா நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்படும் என்பதோடு கர்ப்பாலின் இறுதிச் சடங்குகள் முடிவடையும் வரை பினாங்கு மாநில கொடி மாநிலத்தில் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும்.
தங்களின் அபிமானத் தலைவரின் இழப்புக்கு மரியாதை தெரிவிக்கும் பொருட்டு அடுத்த ஒரு வாரத்திற்கு நாட்டிலுள்ள எல்லா ஜசெக அலுவலகங்களிலும் கட்சிக் கொடியும் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் ஜசெகவின் தலைமைச் செயலாளருமான லிம் குவான் தெரிவித்துள்ளார்.
தற்போது பினாங்கு மாநிலத்தின் ஜியோர்ஜ் டவுனிலுள்ள 144A, ஜாலான் உத்தாமா, என்ற முகவரியிலுள்ள கர்ப்பாலின் இல்லத்தில் அவரது நல்லுடல் கிடத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.