கோலாலம்பூர், ஏப்ரல் 25 – நாளை மலேசியாவிற்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மலேசியாவின் முக்கிய மக்கள் இயக்க பிரதிநிதிகளையும் மலேசியாவில் சுதந்திர தேர்தலுக்காகப் போராடும் பெர்சே இயக்கத் தலைவர்களையும், இஸ்லாமிய இயக்க பிரதிநிதிகளையும் மற்றும் வழக்கறிஞர் மன்ற பொறுப்பாளர்களையும் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்புக்கான அழைப்பிதழ்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு கோலாலம்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அனுப்பியுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் இந்த சந்திப்புக்கான நேரம், இடம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
“அமெரிக்க அதிபர் ஒபாமா, மக்கள் இயக்கப் போராட்டவாதிகளான எங்களை சந்திக்க நேரம் ஒதுக்கி சந்திக்க முன் வந்திருப்பது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது” என பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மக்கள் இயக்கப் பிரதிநிதி மலேசியாகினி செய்தி இணையத்தளத்திடம் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபரை சந்திக்க மற்ற சில அமைப்புகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
சுஹாகோம் எனப்படும் மனித உரிமை ஆணையம், மகளிர் அமைப்பான தெனகாநிதா, இஸ்லாமிய அமைப்பான இஸ்லாமிய சகோதரிகள் – சிஸ்டர்ஸ் இன் இஸ்லாம் (Sisters in Islam) ஆகிய அமைப்புகளும் இந்தச் சந்திப்பிற்கு அழைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.