சென்னை, ஏப்ரல் 26 – தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஓட்டளிக்க திணறியதால், அவரது மனைவி பிரேம லதா உதவினார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், சில மாதங்களாக கண்ணில் நீர்கசிவு பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார். ஆனால், அதுபோல் எந்த பாதிப்பும் தனக்கு இல்லை என அவரது தரப்பில் மறுக்கப்பட்டு வருகிறது.
பிரச்சாரத்தின் போதும், விஜயகாந்த், இதை அடிக்கடி சுட்டிக் காட்டினார். சென்னை, சாலிகிராமம் காவேரி மேல் நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச் சாவடிக்கு, விஜயகாந்த் ஓட்டளிக்க வந்தார். மனைவி பிரேமலதா, மகன்கள் பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் உடன் வந்தனர்.
பிரேமலதாவும், இரு மகன்களும் முதலில் ஓட்டு போட்டனர். கடைசியாக சென்ற விஜயகாந்த், சின்னம் சரியாக தெரியாததால் தடுமாறினார். கண்ணாடியை கழற்றி பார்த்த பிறகும், அவருக்கு குழப்பம் தீராததால், சில விநாடிகள் யோசித்தபடியே நின்றார்.
இதையடுத்து, அருகே சென்ற பிரேமலதா, விஜயகாந்திற்கு சின்னத்தை சுட்டிக் காட்டி ஓட்டளிக்க உதவினார். அதற்குள், அங்கிருந்த பெண் தேர்தல் அதிகாரி, தனித்தனியாக சென்று ஓட்டளிக்க வேண்டும் என, விஜயகாந்திடம் கூறினார்.
அவரிடம், நடந்ததை விளக்கிய விஜயகாந்த், அதன்பிறகு, ஓட்டுச் சாவடியில் இருந்து குடும்பத்தினருடன் வெளியேறினார். ஓட்டுச்சாவடிக்கு விஜயகாந்த் வந்த போது, தென் சென்னை தொகுதி பா.ஜ., வேட்பாளர் இல.கணேசன் ஓட்டுச் சாவடியை பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.
விஜயகாந்த் வந்ததை அறிந்து, அவரையும், அவரது மனைவியையும் வரவேற்றார். சில நிமிடங்கள் அவருடன் பேசிவிட்டு, இல. கணேசன் சென்றார். பின்னர், நிருபர்களிடம் விஜயகாந்த் கூறியதாவது, ஆளும் கட்சியான அ.தி.மு.க., தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளது.
ஆனால், இதையும் மீறி, வாக்காளர்கள் நல்லவர்களுக்கு ஓட்டளித்து, அவர்களை வெற்றி பெற செய்வர். பா.ஜ., கூட்டணியின் கோரிக்கைகளையும், வாக்குறுதிகளையும் மக்கள் முன் வைத்துள்ளோம். அதை ஏற்று, அவர்கள் எங்களை ஆதரிப்பார்கள் என விஜயகாந்த் கூறினார்.