வாஷிங்டன், ஏப்ரல் 26 – பசிபிக் கடல் பிராந்தியத்தில் உள்ள மார்ஷல் தீவுகள் என்ற சிறிய நாடு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு கடந்த 1946 மற்றும் 1958–ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா அணு குண்டு சோதனைகள் நடத்தியது.
இதுவரை 67 தடவைகள் நடத்தப்பட்ட அணு குண்டு சோதனைகளால் அங்கு சுற்றுப்புற சூழலும், மக்களின் உடல் நலமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அணுக் கதிர்வீச்சின் தாக்கம் இன்று வரை இருந்து வருகின்றது.
அமெரிக்காவின் இந்த அணு ஆயுத சோதனை குறித்து மார்ஷல் தீவுகள் நிர்வாகம் சான்பிரான் சிஸ்கோ நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது. அதில் அமெரிக்க அணு ஆயுதம் குறித்த சர்வதேச கூட்டமைப்பு வகுத்துள்ள சட்டத்தை மதிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளது. அதே நேரத்தில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இஸ்ரேல் மற்றும் வடகொரியா உள்ளிட்ட 9 நாடுகள் மீது நெதர்லாந்து தலைநகர் ஹகூவில் உள்ள சர்வதேச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதில் கடந்த 1968–ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சர்வதேச அணு ஆயுத சட்டத்துக்கு புறம்பாக மேற்கூறிய நாடுகள் செயல்படுவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.