Home உலகம் தலாய் லாமா விவகாரம்: சீனாவிற்கு அடிபணிந்தது நார்வே!

தலாய் லாமா விவகாரம்: சீனாவிற்கு அடிபணிந்தது நார்வே!

428
0
SHARE
Ad

dalailama_previoபெய்ஜிங், ஏப்ரல் 29 – திபெத் பகுதியில் சீனா பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செயல்களை செய்துவருகின்றது. சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத்தின் சுதந்திரப் போராட்டம், கடந்த 1959 ல் சீனாவால் அடக்கப்பட்டபோது, திபெத்தியர்களின் தலைவர் தலாய் லாமா, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். போராட்டம் தோல்வியடைந்தபோதிலும் சுதந்திரம் பெறவேண்டும் என்ற எண்ணம் அந்த மக்களிடையே தொடர்ந்து இருந்து வருகின்றது. இதற்காக திபெத்தியர்கள், புத்தத் துறவிகள் எனப் பலர் தீக்குளிப்பு போராட்டங்களில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர்.

“புத்த துறவிகளின் தீக்குளிப்பு போராட்டங்களை புத்தமத தலைவர் தலாய் லாமா ஊக்குவிக்கிறார்” என்று சீன அரசு குற்றம் சாட்டுகின்றது.

இந்த நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு தலாய் லாமாவிற்கு அளிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் கொண்டாடும் விதமாக அவரை நார்வேக்கு வரும்படி ஆஸ்லோவில் உள்ள உள்நாட்டுக் குழுக்கள் அழைத்துள்ளன. இதனை முன்னிட்டு அடுத்த மாதம் 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை அவர் நார்வேக்கு செல்ல உள்ளார். இதற்கு ஏற்கனவே இரண்டு முறை ஆட்சேபனை தெரிவித்துள்ள சீனா, தலாய் லாமாவின் கருத்துகளுக்கு எந்த நாடும் இடம் கொடுப்பதைத் தாங்கள் விரும்பவில்லை என்று கூறியுள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த 1989 ஆம் ஆண்டு சீனாவின் லியு சியாபோ என்ற முன்னோடிப் போராளிக்கு அமைதிக்கான நோபல்  பரிசு வழங்கப்பட்டது. இதில் நார்வே அரசின் தலையீடு உள்ளதெனக் கருதிய சீனா, கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் நார்வேயுடனான உறவுகளை முடக்கியது. தற்போது தலாய் லாமா நார்வேக்கு வருவது, சீனாவுடனான அந்நாட்டின் உறவுகளை மேலும் சீர்குலைக்கும் என்ற நிலையில், நார்வேயின் பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சரும் தலாய் லாமாவை சந்திப்பதில்லை என்ற தங்களின் முடிவைத் தெரிவித்துள்ளனர்.

நார்வேயின் இந்த முடிவினை வரவேற்றுள்ள சீனா, கடந்த காலங்களில் தவறுகள் செய்திருந்தபோதிலும் தற்போது மாற நினைப்பதை, ஏற்றுக்கொள்வதும் ஆதரிப்பதும் மதிப்புடையதாகும் என்று கூறியுள்ளது.