கோலாலம்பூர், மே 1 – தலைநகரின் டத்தாரான் மெர்டேக்கா வளாகத்தில் ஜிஎஸ்டி எனப்படும் பொருள்சேவை வரிக்கு எதிராக ஏறத்தாழ 50,000 பேர் இன்று பிற்பகலில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
50 ஆயிரம் பேர் திரண்டார்கள் என மலேசியாகினி செய்தி இணையத் தளம் தெரிவித்த வேளையில், ஏறத்தாழ 20 ஆயிரம் பேர் திரண்டார்கள் என ஃபிரி மலேசியா செய்தி இணையத் தளம் குறிப்பிட்டது.
ஏறத்தாழ 4.30 மணியளவில் மேடையேறி பேசத் தொடங்கிய எதிர்க் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், ஆர்ப்பாட்டக்காரர்களின் பலத்த கரவொலிகளுக்கிடையில் ஆக்ரோஷமாக உரையாற்றினார்.
“எனது அனைத்துலக நண்பர்கள் அண்மையில் நான் இலண்டன் சென்றிருந்தபோது, அங்கேயே தங்கிவிடச் சொல்லி என்னை வற்புறுத்தினார்கள். ஆனால், நான் மலேசியா திரும்பி போராடப் போகின்றேன் என்று அவர்களிடம் கூறினேன்” என்று அன்வார் இப்ராகிம் கூறினார்.
அரசியல் ரீதியாக மாற்றம் கொண்டுவர நாம் அடுத்த பொதுத் தேர்தல் வரை காத்திருக்க வேண்டும் என்றாலும் அரசாங்க நடைமுறைகளில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவர, நெருக்குதல் கொடுக்கும் நோக்கில் நாம் இப்போதிருந்தே போராடலாம் என அன்வார் கூறினார்.
இதே ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ததற்காக பாஸ் கட்சியின் துணைத் தலைவர் முகமட் சாபு நாம் அனைவரும் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் அன்வார் கூறினார்.
மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினர்.
அதே வேளையில், பொருள் சேவை வரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த ஆர்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக கோலாலம்பூரில் உள்ள உலகின் உயரமான கட்டிடங்களுள் ஒன்றான இரட்டைக் கோபுரத்தின் முன்னாலும்,ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டார்கள்.
படங்கள் – EPA