ஜெனீவா, மே 2 – உலகில் உள்ள பல்வேறு நோய்களுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த நோய்களை குணப்படுத்துவதற்காக நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளையே மருத்துவர்கள் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் மற்ற நோய்களின் தாக்கத்தை குறைப்பதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் இனி நோய் எதிர்ப்பு மருந்துகள் வேலை செய்யாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
நோயை உண்டாக்கும் சூப்பர் பக்ஸ் எனும் கிருமிகள் முன்பு இருந்ததை விட இப்போது வீரியத்துடன் உருவாகி வருகின்றன. எனவே தற்போது உள்ள நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை இனி பயன்படுத்துவதனால் எந்த பயனும் ஏற்படாது. எனவே முன்பை விட வீரிய மிக்க நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த நிறுவனம் கூறுகின்றது.
மருத்துவர்கள் நோய் எதிர்ப்பு மருந்துகளை அதிக அளவில் பரிந்துரைப்பது, நோயாளிகள் இத்தகைய மருந்துகளை பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடு முழுவதும் சாப்பிடாமல், இடையில் நிறுத்துவது போன்ற காரணங்களால் நோய் கிருமிகள் வீரிய சக்தியுடன் மாறி இருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.