சென்னை, மே 3 – இம்மாதத்தில் படங்களை வெளியிட்டு வசூலை அள்ள வரிசையில் நிற்கின்றன முக்கியமான பல படங்கள் உள்ளன.
அவற்றுள் கிட்டத்தட்ட 12 படங்கள் திரையரங்குகளில் வெளியிட காத்திருந்தாலும், ரஜினியின் கோச்சடையான் வருகை காரணமாக திரையரங்குகள் கிடைப்பது கடினமான விஷயமாகிவிட்டது மற்ற படங்களுக்கு.
கோச்சடையான் வெளியாகி இரண்டு அல்லது மூன்று வாரங்கள் வரை வேறு படங்களுக்குத் தர முடியாது என்பதை ஏற்கெனவே திரையரங்க உரிமையாளர்கள் கூறிவிட்டனர். அதன் பிறகுதான் மற்ற படங்கள் வெளியாக முடியும்.
ரஜினியின் கோச்சடையான் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிறது. தமிழகத்தில் உள்ள மொத்த அரங்குகளில் 90 சதவீதம் கோச்சடையானுக்குத்தான் திரையிட உள்ளது.
கோச்சடையான் வெளியாகும் நாளில் மட்டுமல்ல, அதற்கடுத்த வாரத்திலும் கூட வேறு படங்கள் வெளியாவது கஷ்டம்தான்.
ஜெயம் ரவி – த்ரிஷா நடித்துள்ள பூலோகம் படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் உள்ளது. குத்துச்சண்டையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படமும் மே மாத ரிலீசுக்குக் காத்திருக்கிறது.
விமல், லட்சுமி மேனன், ராஜ்கிரண் நடித்துள்ள மஞ்சப் பை படம், இயக்குநர் சற்குணத்தின் சொந்தப் படம். மே இறுதி வாரத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
சந்தானம் நாயகனாக நடித்துள்ள வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் ஓரளவு எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. மே 16-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அந்த வாரம் திரையறங்குகள் கிடைக்காவிட்டால், மேலும் தள்ளிப் போகலாம் என கூறப்படுகிறது.
இவை தவிர, திருமணம் எனும் நிக்காஹ், விஜய் சேதுபதி நடிக்கும் மெல்லிசை, ஸ்ரீகாந்தின் நம்பியார், விமல் நடித்த ரெண்டாவது படம், விக்ரம் பிரபுவின் அரிமா நம்பி, கிருஷ்ணா நடித்த யாமிருக்க பயமே. போன்றவையும் மே மாதத்தை குறி வைத்துக் காத்திருக்கின்றன.