ஸ்லாவியான்ஸ்க், மே 5 – உக்ரைன் நாட்டில் அரசு கட்டிடத்துக்கு தீ வைக்கப்பட்டது. இதில் சிக்கி ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் 31 பேர் உடல் கருகி பலியாகினர்.
கிழக்கு உக்ரைனில் 10-க்கும் மேற்பட்ட நகரங்களில், அரசு கட்டிடங்களை ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி வைத்துள்ளனர். அரசு கட்டிடங்களை மீண்டும் தன்வசப்படுத்த, உக்ரைன் பாதுகாப்பு படையினர் ராணுவத் தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக ஸ்லாவியான்ஸ்க் நகரில் இருதரப்புக்கு இடையே பலத்த சண்டை நடந்து வருகிறது.
இந்நிலையில், அங்கு கருங்கடலோரப் பகுதியில் அமைந்துள்ள ஒடேஸ்சா என்ற நகரத்தில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும், உக்ரைன் படையினருக்கும் இடையே பயங்கர சண்டை நடந்து வருகிறது. இதில் அங்கு ஒரு அரசு கட்டிடத்துக்கு தீ வைக்கப்பட்டது. இந்த அசம்பாவிதச் செயலினால் மொத்தம் 31 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுபற்றி கடும் கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்யா, ஸ்லாவியான்ஸ்க் நகரில், உக்ரைன் அரசு அப்பாவி மக்கள் மீது நடத்தி வரும் வான்வழித் தாக்குதல் மூலமாக சர்வதேச அமைதி சட்ட திட்டங்களை சீர்குலைத்துள்ளது எனக் கூறிவருகின்றது.