டெல்லி, மே 6 – ராணுவ வாகனங்கள் வாங்க ராணுவ தளபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக எழுந்த புகார் குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே அந்தோணியிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.
கடந்த 2010-ஆம் ஆண்டு ராணுவத்திற்கு 1676 ராணுவ வாகனங்களை குறிப்பிட்ட நிறுவனத்திடம் வாங்குவதற்கு 14 கோடி ரூபாய் தனக்கு லஞ்சம் தர முன்வந்ததாக முன்னாள் ராணுவ தளபதி வி.கே சிங் புகார் தெரிவித்தார்.
ராணுவ அதிகாரி ஒருவர் மூலமே லஞ்சம் பெறுவதற்கு தம்மை தொடர்பு கொண்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த சிபிஐ இந்த விவகாரம் தொடர்பான உரையாடல் பதிவுகளை கைப்பற்றி விசாரித்து வருகிறது.
இது பற்றி பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே அந்தோணியிடமும் விசாரிக்கப்பட்டு அவரது வாக்குமூலம் ஒரு சாட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்த சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா உறுதி செய்துள்ளார்.
தம்மிடம் வி.கே.சிங் தெரிவித்த புகார் குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ததாகவும், அதன் பின் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதாகவும் அந்தோணி வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.