சேலம், மே 7 – சேலம், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிகளில் நாளை (8-ஆம் தேதி) இரண்டு வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
சேலம், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதியன்று நடைபெற்றது. மொத்தம் 76.73 சதவீத வாக்கு பதிவானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
வாக்குப்பதிவு அன்று சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் மின்னணு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 30 எந்திரங்கள் உடனடியாக மாற்றப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது. சில இடங்களில் எந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தாமதமாகவே வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
இதனால், எந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கையின்போது பிரச்சனை எழலாம் என்ற சந்தேகம் மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான ஹனிஸ்ஷாப்ராவுக்கு ஏற்பட்டது.
எனவே, அந்த வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்திட இந்திய தலைமை தேர்தல் அதிகாரிக்கும், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்று, அங்கு நாளை (வியாழக்கிழமை) மறுவாக்குப்பதிவு நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற ஓட்டுப்பதிவின் போது வாக்காளர்களுக்கு ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டதால், நாளை நடைபெறும் மறுவாக்குப்பதிவில் வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்படும். இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் தண்டோரா போட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது.