வாரணாசி, மே 12 – உ.பி., மாநிலம், வாரணாசி நாடாளுமனற தொகுதியில், இன்று தேர்தல் நடக்கபெறும் நிலையில், அங்குள்ள பா.ஜ., அலுவலத்தில், போலீசாரும், தேர்தல் அதிகாரிகளும், நேற்று அதிரடிச் சோதனை நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உ.பி., மாநிலம், வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில், இன்று தேர்தல் நடக்கிறது. பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும், இங்கு போட்டியிடுவதால், இந்த தொகுதி, முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த சில நாட்களாக, மோடி, ராகுல், கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள், இங்கு முகாமிட்டு, பிரமாண்ட பேரணிகளை நடத்தினர். மோடியின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் ஆணையத்தை கண்டித்து, பா.ஜ., தலைவர்கள், வாரணாசியில் போராட்டம் நடத்தினர்.
தேர்தல் ஆணையம், காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், பா.ஜ., கட்சியினர் குற்றம் சாட்டினர். இந்நிலையில், வாரணாசியில் உள்ள பா.ஜ., அலுவலகத்துக்கு, போலீசாரும், தேர்தல் ஆணை அதிகாரிகளும், நேற்று வந்தனர்.
அலுவலகம் முழுவதும் சோதனையிட்ட அவர்கள், பனியன், கொடி, துண்டு பிரசுரம், பேட்ஜ் ஆகியவற்றை பறிமுதல் செய்து, எடுத்துச் சென்றனர். அவர்கள் கூறுகையில்,”வாரணாசியில் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்துள்ள நிலையில், பா.ஜ., அலுவலகத்தில் இருந்து, தொகுதி முழுவதும், பிரச்சார பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதாக புகார் வந்தது. இதன் அடிப்படையில் தான், சோதனை நடத்தினோம்’ என்றனர்.
பா.ஜ., தலைவர்கள் கூறுகையில், “தேர்தல் ஆணையம், காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது என, ஏற்கனவே அறிவித்துள்ளோம். தற்போது, அது, நிரூபிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.