கோலாலம்பூர், மே 13 – நாட்டில் பலத்த அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஹுடுட் சட்ட மசோதாவை தற்போது ஒத்தி வைப்பதாக பாஸ் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹடி அவாங் (படம்) தெரிவித்துள்ளார்.
இந்த மசோதாவை, அடுத்த மாதம் மக்களவையில் முன்மொழிய பாஸ் கட்சி உத்தேசித்திருந்தது.
அடுத்தடுத்து நடக்கப் போகும் இடைத் தேர்தல்களினால்தான், பாஸ் கட்சி இந்த ஒத்திவைப்பு முடிவை எடுத்துள்ளது என்பது நன்கு புலனாகின்றது.
ஆனால் பாஸ் அதிகாரபூர்வமாக வேறு ஓர் காரணத்தைக் கூறியிருக்கின்றது.
புத்ராஜெயா, கிளந்தான் கூட்டுத் தொழில் நுட்படக்குழுவின் ஆய்வுக்குப் போதுமான அவகாசம் வழங்கும் வகையில் ஹுடுட் மசோதாவை ஒத்தி வைப்பதாக ஹடி அவாங் ஓர் அறிக்கையின் வழி தெரிவித்திருக்கின்றார்.
கிளந்தானில் ஹுடுட் சட்டத்தை அமல்படுத்த நாடாளுமன்றத்தில் முன்வரைவுச் சட்டத்தை தாக்கல் செய்யக் காத்திருக்கும் பாஸ் கட்சி அதற்கு முன் தொழில்நுட்பக் குழுவின் ஆய்வுக்கு வழி விட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிளந்தான் அரசாங்கமும் கூட்டரசு அரசாங்கமும் அந்தத் தொழில் நுட்பக் குழுவை அமைக்கலாம் என்ற துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசினின் பரிந்துரையை பாஸ் ஏற்றுக் கொண்டிருப்பதாக பாஸ் கட்சி துணைத் தலைவர் முகமட் சாபு கூறியிருக்கின்றார்.
சீன வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இடைத் தேர்தல்கள் காரணமா?
அடுத்து நடக்கப் போகும் புக்கிட் குளுகோர், தெலுக் இந்தான் தொகுதிகளில் பெரும்பான்மையாக சீன வாக்காளர்கள் இருக்கின்றார்கள்.
இங்கே போட்டியிடப் போகும் ஜனநாயக செயல்கட்சி, ஹூடுட் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வருவதோடு, இதனால் பாக்காத்தான் ராயாட் எனப்படும் மக்கள் கூட்டணி உடையலாம் என்று அதன் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் (படம்) எச்சரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால்தான் தாங்கள் இன்னும் ஹூடுட் சட்டத்தைக் கொண்டு வருவதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தால் அதனால் மக்கள் கூட்டணிக்கே ஆபத்து வரலாம் – அதன் பின்னர் முஸ்லீம் அல்லாத வாக்காளர்களைக் கவர்வது பாஸ் கட்சிக்கு பெரும் சிரமமாக இருக்கும் என்ற கண்ணோட்டத்தில்தான் பாஸ் தற்சமயத்திற்கு பின்வாங்கியுள்ளது.
பாஸ் கட்சி ஹூடுட்டை ரத்து செய்யாது – சலாஹூடின்
இதற்கிடையில் ஹுடுட் சட்ட அமலாக்கத் திட்டத்தை ரத்து செய்யும் எண்ணம் பாஸ் கட்சிக்கு இல்லை என்று அதன் துணைத் தலைவர் சலாஹுடின் அயூப் தெரிவித்திருக்கின்றார்.
ஹுடுட் செயலாக்கத்தை முடக்கிக்கொள்ள நாங்கள் தயாராக இருப்பதாகக் கூறப்படுவதில் துளியளவும் உண்மையில்லை! தவறான கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு பாஸ் கட்சியின் தன்மானத்தை கவிழ்க்க முயல்கிறார்கள் என்று சலாஹுடின் அயூப் (படம்) கூறியிருக்கின்றார்.
ஹுடுட் சட்ட அமலாக்கம் குறித்து விரிவான பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசாங்கத்துடன் பாஸ் அரசாங்கம் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாக இணைய ஊடகங்களில் சலாஹூடின் தெரிவித்திருக்கின்றார்.
மத்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடல் நடத்தும் அளவுக்கு எங்களது செயல்நடவடிக்கைகள் வேகமாக நகர்கின்ற நிலையில், ஹுடுட் சட்டத்தை அமலாக்குவதிலிருந்து நாங்கள் பின்வாங்கமாட்டோம் என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.