மியன்மார், மே 12 – 1997இல் ஆசியானில் இணைந்த மியன்மார் முதல் முறையாக இந்த முறை ஆசியான் உச்ச நிலை மாநாட்டை ஏற்று நடத்துகின்றது.
இரண்டு நாட்கள் மியன்மார் நாட்டின் நியாபிடோ என்னும் அரசாங்கத் தலைநகரில் நடைபெறும் ஆசியானின் ஈராண்டு மாநாட்டில் கலந்து கொள்வதற்கு ஆசியானின் தலைவர்கள் மியன்மாரில் ஒன்று கூடியுள்ளனர்.
ஆசியான் சமூகத்தின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் ஆசியானின் எதிர்கால வடிவம், ஆசியான் சமூகம், வெளியுறவுக் கொள்கை முதலியவை பற்றி விவாதிக்க ஆசியானில் உறுப்பியம் பெற்றுள்ள 9 நாட்டுத் தலைவர்கள் இந்த உச்ச நிலை மாநாட்டுக்காக கூடியுள்ளனர்.
இந்த மாநாட்டில், புருணை சுல்தான், இந்தோனேசியா அதிபர், பிலிப்பைன்ஸ் அதிபர், சிங்கப்பூர் பிரதமர், வியட்நாமிய பிரதமர், மலேசிய பிரதமர், கம்போடிய பிரதமர், லாவோஸ் பிரதமர் மற்றும் தாய்லாந்து துணைப் பிரதமர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
“வளமான அமைதியான சமூகமாக உருவாக, ஒற்றுமையோடு இணைந்து செல்லுதல்’” எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு கூடியுள்ள இந்த மாநாட்டில் அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரம், சமூகம், பண்பாடு ஆகிய விஷயங்களில் இக்கூட்டம் கவனம் செலுத்தவிருக்கிறது.
இதனிடையே, இந்த உச்சநிலை மாநாட்டிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தலைமை தாங்குகிறார்.
அடுத்த ஆண்டு ஆசியான் அமைப்புக்கு மலேசியா தலைமை ஏற்கவிருப்பதால் மலேசிய குழுவினருக்கும் மியன்மார் உச்சநிலை மாநாடு மிக முக்கியமாக கருதப்படுகிறது.
ஆசியான் அல்லது தென்கிழக்காசிய நாடுகளின் இயக்கம் எனும் பெயரில் 1967 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பில் புரூணை, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியன்மார், சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன.
படம்: EPA