வாஷிங்டன், மே 14 – மிகப் பெரிய தேர்தலை வெற்றிகரமாக முடித்ததற்கு வாழ்த்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, ‘‘இந்தியாவின் புதிய அரசுடன் இணைந்து செயல்படுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினருக்கு9 கட்டமாக நடந்த தேர்தல் நேற்று முன்தினத்துடன் முடிந்தது. இதன் முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்பட உள்ளன. இந்நிலையில், இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
“இந்தியா மிகப் பெரிய ஜனநாயக தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்து, வரலாற்றில் முன் மாதிரியாக விளங்குகிறது. வரும் காலங்களில் இரு நாடுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், இந்தியாவின் புதிய அரசுடன் இணைந்து செயல்படுவதை அமெரிக்கா ஆவலுடன் எதிர்பார்க்கிறது.
இந்தியாவும், அமெரிக்காவும் கட்சி பாகுபாடின்றி கடந்த 20 ஆண்டுகளாக நட்புடன் திகழ்கின்றன. இதன் மூலம் இரு நாட்டு மக்களும் பாதுகாப்பாகவும், செழிப்புடனும் உள்ளனர். இருநாடுகளும் இணைந்து செயல்படுவதால் சர்வதேச பிரச்சனைகளை தீர்க்கும் திறனும் அதிகரித்துள்ளது” என ஒபாமா தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.