புதுடில்லி, மே 16 – குஜராத் மாநிலம் நரேந்திர மோடியின் கோட்டை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
இந்த மாநிலத்தின் முதல்வராக தனது திறமைகளைக் காட்டியதால்தான் இன்றைக்கு அகில இந்தியாவாலும் கவனிக்கப்பட்டு, நாட்டின் பிரதமராகவும் புது டில்லியில் மோடி காலடி வைக்கின்றார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள மொத்த 26 தொகுதிகளையும் கைப்பற்றி பாஜக கூட்டணி சாதனை படைத்துள்ளது.
இதன்வழி, தங்களின் முதல்வர் நரேந்திர மோடிக்கு பக்கபலமாக நின்றிருக்கின்றது குஜராத்.
குஜராத்தில் வடோடோரா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட மோடி 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளார்.
ராஜஸ்தானிலும் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியது பாஜக
மற்றொரு வட இந்திய மாநிலமான ராஜஸ்தானில் மொத்தமுள்ள நாடாளுமன்ற தொகுதிகள் 25 ஆகும்.
ராஜஸ்தானின் அனைத்து 25 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றி சாதனை புரிந்துள்ளது.
ஆக, குஜராத், ராஜஸ்தான் இரண்டு மாநிலங்களிலும் அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளையும் பாஜக கூட்டணி கைப்பற்றி சாதனை புரிந்துள்ளது.