காசியாபாத் (உத்தரப் பிரதேசம்), மே 17 – உத்தரப் பிரதேசத்திலுள்ள காசியாபாத் (Ghaziabad) தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி வி.கே.சிங் (படம்) 5 இலட்சத்து 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றிருக்கின்றார்.
வடோடோராவில் வெற்றி பெற்ற நரேந்திர மோடிதான் இதுவரை அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் அதிகமான பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெற்றிருக்கின்றார்.
அவரை அடுத்து இரண்டாவது நிலையில் அதிகப் பெரும்பான்மையில் வெற்றி பெற்ற வேட்பாளராக, வி.கே.சிங் திகழ்கின்றார்.
நரேந்திர மோடியின் அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சிலோ, அல்லது வெளிநாட்டுக் கொள்கைகளில் மோடியின் பாதுகாப்பு ஆலோசகராகவோ முக்கிய பொறுப்புகளில் சிங் அமர்த்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரபல இந்தி நடிகர் ராஜ் பாப்பர் வைப்புத் தொகையை இழந்து மோசமான முறையில் தோல்வியடைந்துள்ளார்.
இந்திய அரசியலில் உயர்நிலை பதவி வகித்த முன்னாள் இராணுவப் பொறுப்பாளர்கள் ஈடுபடுவது மிகவும் அபூர்வம்.
ஆனால், தேர்தலில் ஈடுபட்டு மிகப் பெரிய பெரும்பான்மையில் வெற்றியும் பெற்றிருக்கின்றார்.
அண்மையில், காங்கிரஸ் அரசாங்கம் அவசரம் அவசரமாக புதிய இராணுவத் தளபதியாக டல்பீர் சிங் சுஹாக்கை நியமித்ததற்கு வி.கே.சிங் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.