Home உலகம் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சிகரெட் விற்பதற்கு திடீர் தடை – நியூயார்க்

21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சிகரெட் விற்பதற்கு திடீர் தடை – நியூயார்க்

920
0
SHARE
Ad

seguredநியூயார்க், மே 20 – அமெரிக்காவின் நியூயார்க் நகரில், புகை பிடிப்பதற்கான வயது வரம்பு 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சிகரெட் விற்பது தடை செய்யப்பட்டுள்ளது.

இச்சட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் டீன்-ஏஜ் ஆண்களும், பெண்களும் போதை பழக்கத்துக்கு அடிமையாவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, இளம் வயதினர் புகைப் பிடிப்பதை கட்டுப்படுத்துவதற்காக, முன்னாள் மேயர் மைக்கேல் புளோம்பர்க் தனது 2-வது பதவி காலம் முடியும் தருவாயில், புதிய சட்ட மசோதா ஒன்றை கொண்டு வந்தார்.

#TamilSchoolmychoice

கடைகளில் சிகரெட் வாங்குவதற்கான வயது வரம்பை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தக்கூடிய அந்த மசோதா கடந்த நவம்பர் 19-ஆம் தேதி பரிந்துரைக்கப்பட்டது. 6 மாத காத்திருப்பில் வைக்கப்பட்டிருந்த இந்த மசோதா தற்போது சட்டமாக அமலுக்கு வந்துள்ளது.

புதிய உத்தரவை தொடர்ந்து, அனைத்து கடைகளிலும், ‘21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சிகரெட் கிடையாது’ என அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. சிகரெட் வாங்க வரும் இளம் வயதினரிடம், அவர்களின் வயதுச் சான்றுக்கான அடையாள அட்டையை ஸ்கேன் செய்த பின்னரே சிகரெட் பாக்கெட்டுகள் விற்கப்படுகிறது.

மேலும், தனியார் கட்டிடம், பூங்காக்கள், சாலை உள்ளிட்ட பொது இடங்களில் புகைப் பிடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிகரெட் விற்பனை வரியும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

cigapspஇதன் மூலம், 18 முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் புகைப் பிடிப்பது பெருமளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்களும், கடைக்காரர்களும் கூறுகின்றனர். இச்சட்டம் சிகரெட்டுக்கு மட்டுமின்றி இ-சிகரெட், புகையிலை பொருட்களுக்கும் பொருந்தும்.

இது குறித்து நியூயார்க் நகர மக்கள் கூறுகையில், ‘இச்சட்டத்தின் மூலம் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் புகைப்பிடிக்க முடியாதபடி செய்ய முடியாதுதான். என்றாலும், இந்த உத்தரவு சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள ஒரு நல்ல முடிவாகும்‘ என்கின்றனர்.

நியூயார்க்கில் புகை பழக்கத்துக்கு ஆளாகும் இளம் பருவத்தினர் எண்ணிக்கை ஆண்டுதோறும் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 2002-ல் 21.5 சதவீதம் இருந்த புகைப் பிடிப்பவர்களின் எண்ணிக்கை 2011ல் 14.8 ஆக குறைந்துள்ளது.

ஆனாலும், இளைஞர்களை பொறுத்த வரையில் 2007 கணக்கெடுப்பின்படி 8.5 சதவீதத்திலிருந்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. இதனையும் கட்டுப்படுத்துவதற்காகத்தான் தற்போது புகைப் பிடிப்பவர்களின் வயது வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

புகையிலை பழக்கத்தால், ஆண்டுதோறும் உலகம் முழுவதும் 6 லட்சம் மக்கள் இறப்பதாக உலக சுகாதார அமைப்பு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.