சென்னை, மே 20 – நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகப் பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்க நடிகர் விஜய் டெல்லி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருணாநிதி முதல்வராக இருந்த காலகட்டத்தில் அரசியலுக்கு வருவேன் என்று வெளிப்படையாக அறிவித்து, அதற்கு முன்னோட்டமாக மக்கள் மன்றம் ஆரம்பித்து, மாவட்ட அளவில் நிர்வாகிகளையெல்லாம் நியமித்தவர் விஜய்.
ஆனால் ஆட்சி மாறி, ஜெயலலிதா முதல்வரானதும், எல்லாவற்றையும் விட்டுவிட்டு, நடிப்பதை மட்டும் கவனித்து வருகிறார். தன் பிறந்த நாள் விழாவைக் கூட வெளிப்படையாகக் கொண்டாட முடியாத நிலையில் உள்ளார் விஜய்.
இந்த நேரத்தில்தான் அவர் கோவைக்குச் சென்று மோடியைச் சந்தித்தார். மோடிக்கும் இவருக்கும் என்ன தொடர்பு? எதற்காக கோவை சென்று சந்தித்தார்? இதில் யாருக்கு என்ன பலன்? என்பதெல்லாம் விடையில்லாத கேள்விகளாக இருந்தன.
மோடிக்கு, தான் ஆதரவு தெரிவித்தது போலவும் இருக்க வேண்டும், அதே நேரம், அது அரசியல் மாதிரியும் தெரியக்கூடாது, அதனால் தமிழகத்தில் ஆளுங்கட்சியைப் பகைத்துக் கொண்டதாக ஆகிவிடக் கூடாது.
ஒருவேளை மோடி வென்றால் எளிதில் சேரலாம், தோற்றால் சிக்கலில்லாமல் விலகிக் கொள்ளலாம். இப்படியெல்லாம் கணக்குப் போட்டுதான் விஜய் அன்று கோவைக்குப் போனார்.
சந்திப்பு முடிந்ததும், இந்த சந்திப்பில் அரசியலே இல்லை என்று மருதமலை முருகன் மீது சத்தியம் அடிக்காத குறையாகப் பேசினார் விஜய். ஒரு அரசியல் தலைவரை, சினிமா நடிகர் எதற்காக சந்தித்துப் பேச வேண்டும். மோடி என்ன புதுப் படத் தயாரிப்பாளரா, அவரிடம் சினிமா பற்றிப் பேச என விமர்சனங்கள் எழுந்தன.
இப்போது அனைத்துக்கும் விடை தரும் விதமாக விஜய்யின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. நரேந்திர மோடியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தவர், கூடவே தமிழக முதல்வரையும் உலகத் தலைவர் என்று பாதுகாப்பாகப் பாராட்டி வைத்தார்.
அடுத்து, நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்கும் மே 21-ஆம் தேதி டெல்லி சென்று, விழாவில் பங்கேற்கப் போகிறாராம் விஜய். அப்போது மோடியை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி, தன் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளார்களாம் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.