Home India Elections 2014 தேர்தல் முடிவுகள் பார்வை # 2 : டில்லியின் 7 தொகுதிகளிலும் பாஜக வெற்றி –...

தேர்தல் முடிவுகள் பார்வை # 2 : டில்லியின் 7 தொகுதிகளிலும் பாஜக வெற்றி – இனி அடுத்த மாநில அரசை அமைக்கும் போராட்டம்!

759
0
SHARE
Ad

narendra-modiபுதுடில்லி, மே 21 – நடந்து முடிந்த இந்தியத் தேர்தலில் டில்லி யூனியன் பிரதேசத்திலுள்ள அனைத்து 7 நாடாளுமன்றத் தொகுதிகளையும் வென்றிருப்பதன் வழி பாஜக தனது அசுர பலத்தை – மோடி அலையின் சக்தியை – டில்லியிலும் நிரூபித்துள்ளது.

டில்லியின்  அனைத்து தொகுதிகளிலும் இரண்டாவது நிலையில் அதிகமாக வாக்குகள் எடுத்துள்ள கட்சி ஆம் ஆத்மி கட்சியாகும்.

காங்கிரஸ் மூன்றாவது நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

#TamilSchoolmychoice

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 66 சதவீதத்திற்கும் மேற்பட்ட டில்லி மக்கள் திரண்டு வந்து இந்த பொதுத் தேர்தலில் வாக்களித்திருக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய மாநில அரசாங்கத்தை அமைப்பது யார்?

அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் 28 சட்டமன்றத் தொகுதிகளில் வென்று சாதனை படைத்து, காங்கிரஸ் துணையுடன் ஆட்சியும் அமைத்த ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால், அடுத்த 49 நாட்களிலேயே தனது அரசியல் முதிர்ச்சியற்ற நடவடிக்கைகளால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் மக்களுக்கு அந்த கட்சியின் மீது இருந்த எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் வெகுவாக சீர்குலைந்தது.

புதிய மாநில அரசை நியமிக்கும் முடிவை தேர்தல் ஆணையம் பொதுத் தேர்தல் கருதி ஒத்தி வைத்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சியினர் என்ன செய்யப் போகின்றார்கள் என அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்க, அதிலும் சில முட்டாள்தனமான முடிவுகளை எடுத்தது ஆம் ஆத்மி.

Arvind Kejriwal meets people(அரவிந்த் கெஜ்ரிவால்)

கெஜ்ரிவாலின் வாரணாசி போட்டியால் மக்கள் அதிருப்தி 

குறிப்பாக, கெஜ்ரிவாலின் வாரணாசி தொகுதி பிரவேசம்.

நாடே மோடியை மாற்றத்தின் பிரதிபலிப்பாக எதிர்பார்த்துக் காத்திருக்க, ஏதோ புகழுக்காக நிற்பவர்போல் கெஜ்ரிவால் வாரணாசி தொகுதியில் போய் போட்டியிட்டது – கடந்த 10 ஆண்டுகளாக ஊழல் சாம்ராஜ்யம் நடத்திய காங்கிரசை எதிர்த்துப் பேசாதது – போன்ற காரணங்களால் மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கும் காங்கிரசுக்கும் இடையில் மறைமுக ஒப்பந்தம் இருக்கின்றதோ என நினைக்கத் தொடங்கியுள்ளனர்.

அதற்கு ஏற்றாற்போல், இப்போது  காங்கிரஸ் ஒத்துழைப்புடன் மீண்டும் டில்லியில் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி முனைவதாக தகவல்கள் வரத் தொடங்கியுள்ளன.

டில்லி சட்டமன்றத்தின் நிலைமை

தற்போதைய டில்லி சட்டமன்றத்தில் பாஜக 32 தொகுதிகளையும், ஆம் ஆத்மி 28 தொகுதிகளையும் காங்கிரஸ் 8 தொகுதிகளையும் மற்ற கட்சிகள் இரண்டு தொகுதிகளையும் கைப்பற்றி வைத்திருக்கின்றன.

இதனால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆம் ஆத்மி மிகவும் எளிதாக ஆட்சி அமைக்க முடியும். அதே சமயத்தில் இந்த இழுபறி நிலையினால், டில்லியில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற அறைகூவல்களும் எழுந்துள்ளன.

மீண்டும், மறு தேர்தல் நடத்த வேண்டும் என்ற முனைப்புடன் டில்லி மாநில அரசை வெற்றி கொள்ள முனைப்பு காட்டிவரும் பாஜக தனது முதலமைச்சர் வேட்பாளராக, முன்னாள் காவல்துறை அதிகாரி கிரண் பேடியை முன் நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

kiran-bedi(கிரண் பேடி)

ஊழலற்ற இயக்கத்தின் இன்னொரு முகம் கிரண் பேடி

அண்ணா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் முன்னிலை வகித்த கிரண் பேடி, பின்னர் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாஜகவில் சேர்ந்தார்.

புதுடில்லியிலுள்ள – ஆசியாவிலேயே பெரிய – திஹார் சிறைச்சாலையின் பொறுப்பாளராகப் பதவி வகித்துள்ள முதல் பெண்மணியான கிரண்பேடி, பொதுமக்கள் மத்தியில் ஊழலற்ற தலைவராக – கெஜ்ரிவாலுக்கு இணையாக ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுப்பவராகப் பார்க்கப்படுபவர்.

இன்றைய செய்திகளின்படி, டில்லி சட்டமன்றத்தைக் கலைக்கக் கூடாது என ஆம் ஆத்மி கட்சி இந்திய அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

மீண்டும் சட்டமன்றத் தேர்தல் நடந்தால், தற்போது பிரளயமாக எழுந்துள்ள மோடி அலையால் – அம்மாநிலத்தின் 7 நாடாளுமன்றங்களையும் பாஜக வென்றுள்ள நிலையில் – டில்லி மாநில சட்டமன்றப் பெரும்பான்மையையும் பாஜகவே கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிலும் கிரண் பேடியை அடுத்த டில்லி  முதல்வராக அறிவித்தால் மக்களிடையே ஆர்வமும் ஆதரவும் மேலும் பன்மடங்காகப் பெருகும் என்ற  காரணத்தால், ஆம் ஆத்மி மீண்டும் தேர்தல் களத்தைச் சந்திக்க அச்சமடைகின்றது.

மீண்டும் நடைபெறும் டில்லி சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தால் அதோடு ஆம் ஆத்மி கட்சியின் கவர்ச்சியும் – மினுமினுப்பும் – அதலப் பாதாளத்துக்கு சென்று விடும் என்பதும் அரசியல் பார்வையாளர்களின் கணிப்பாகும்.

இதனால், இந்தியப் பொதுத் தேர்தல் என்ற பரபரப்பான திரைப்படத்தை கண்டு களித்து முடித்திருக்கும் இந்திய பொதுமக்கள் –

– அடுத்த சில நாட்களுக்கு – இனி டில்லியில் அரங்கேறப் போகும் புதிய திருப்பங்களுடன் கூடிய காட்சிகளை உள்ளடக்கிய – குறும்படத்தை பார்த்து ரசிக்கலாம்.

-இரா.முத்தரசன்