Home அவசியம் படிக்க வேண்டியவை தேர்தல் முடிவுகள் பார்வை # 4 : மீண்டும் முதல்வராக சந்திரபாபு நாயுடு!

தேர்தல் முடிவுகள் பார்வை # 4 : மீண்டும் முதல்வராக சந்திரபாபு நாயுடு!

748
0
SHARE
Ad

Chandrababu-Naidu-196ஹைதராபாத், மே 25 – ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி வகித்த காலத்தில் ஒருமுறை தனது அரசாங்க குழுவோடு மலேசியாவுக்கு வருகை புரிந்தார்.

அப்போது, மலேசியாவின் பிரதமராக இருந்த டாக்டர் மகாதீர் முகமட்டைச் சந்திக்க நாயுடுவுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே நேரம் ஒதுக்கப்பட்டது – அவர் ஒரு மாநிலத்தின் முதல்வர் தானே என்பதால்!

ஆனால், சந்திரபாபுவின் அணுகுமுறை, அறிவாற்றல், பொருளாதார ரீதியான சிந்தனைத் திறன் ஆகியவற்றால் கவரப்பட்ட மகாதீர் சந்திரபாபுவுடனான தனது சந்திப்பு நேரத்தை ஒன்றை மணி நேரத்திற்கு நீட்டித்தார்.

#TamilSchoolmychoice

அந்த சந்திப்பின்போது புரோட்டான் கார் தயாரிப்பு தொழிற்சாலையை ஆந்திராவில் நிறுவுவதை வரை விவாதிக்கப்பட்டது.

சிறந்த பணிகளாற்றியும் தோல்வி

அத்தகைய கவர்ச்சியைக் கொண்டிருந்த சந்திரபாபு நாயுடு எதிர்பாராத அரசியல் திருப்பத்தினால், ஆந்திர சட்டமன்றத் தேர்தல்களில் கடந்த முறை தோல்வி கண்டு, தனது முதல்வர் பதவியையும் இழந்தார்.

இருப்பினும் அவரது தலைமைத்துவ கால கட்டத்தில் ஆந்திரா அபரிதமான வளர்ச்சியைப் பெற்றது – பொருளாதார மேம்பாடுகளைச் சந்தித்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

இன்றைக்கு, அதேபோன்று மேம்பாடுகளை இந்தியா முழுக்க கொண்டு வருகின்றேன் என்ற தாரக மந்திரத்தோடு மோடி தேர்தல் களத்தில் இறங்க , அவரோடு கைகோர்த்து – கூட்டணி அமைத்து போட்டியிட்ட – அவரைப் போன்றே மேம்பாட்டுத் தத்துவ சிந்தனை கொண்ட சந்திரபாபு நாயுடுவை சீமந்தரா மக்கள் வாரியணைத்து அரியணையில் அமர்த்தி விட்டனர்.

தெலுங்கானா பிரிந்து போய்விட மிஞ்சியிருக்கும் ஆந்திரா தற்போது சீமந்தரா என்று அழைக்கப்படுகின்றது.

சீமந்திராவில் காங்கிரசுக்கு ஓர் இடம் கூட இல்லை

இந்த சீமந்திரா மாநிலத்தின் மொத்தமுள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் 106 தொகுதிகளை நாயுடுவின் தெலுகு தேசமும், பாஜகவும் இணைந்த கூட்டணி கைப்பற்றியுள்ளன.

25 நாடாளுமன்றத் தொகுதிகளில் 17 இடங்களை இந்த கூட்டணி வெற்றி கொண்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தைப் பிரித்ததால் பாதிக்கப்பட்டது தாங்கள்தான் எனக் கருதிய சீமந்திரா மக்கள், காங்கிரஸ் மீது வெறுப்புணர்வோடு வாக்களிக்க சீமந்திரா மாநில சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் ஓர் இடம் கூட காங்கிரசால் வெல்ல முடியவில்லை.

25-jaganmohan-reddy-600ஒய்எஸ்ஆர் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி

ஆனால், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் 67 சட்டமன்ற இடங்களைக் கைப்பற்றி மாநிலத்தின் இரண்டாவது பெரிய கட்சியாக, எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.

நாடாளுமன்றத்திலும் 8 இடங்களைக் கைப்பற்றி, மத்தியில் பாஜகவுக்கு விவகார அடிப்படையில் ஆதரவு கொடுப்போம் என ஒய்எஸ்ஆர் கட்சி அறிவித்துள்ளது.

நாயுடுவின் வெற்றிக்குக் காரணம்…

06-chandrababu-naiduமாநிலம் பிரிக்கப்பட்டதாலும், அடுத்த பத்தாண்டுகளுக்குப் பின்னர் மாநிலத் தலைநகர் ஹைதராபாத் தெலுங்கானா மாநிலத்தில் இணைந்து விடும் என்பதாலும், சீமந்திராவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல நாயுடுவின் சிறந்த நிர்வாத் திறனே உதவும் என்ற நம்பிக்கையில் சீமந்திரா மக்கள் அவருக்கு ஒருமித்த ஆதரவு தந்திருக்கின்றனர்.

நாயுடு, பெரும் முயற்சியில் முன்னணித் தலைநகராக உருவாக்கிய ஹைதராபாத் அடுத்த பத்தாண்டுகளுக்கு இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராகத் திகழும் என்பதோடு அதன் பின்னர் தெலுங்கானா மாநிலத்தின் தலைநகராக அந்த பிரதேசத்தில் சேர்ந்து கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாயுடுவும் கூடிய விரைவில் சீமந்திராவுக்கான புதிய தலைநகரை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபடுவேன் என்று அறிவித்துள்ளார்.

நாடெங்கும் வீசிய பாஜக – மோடி அலை – மாநிலத்தைப் பிரித்ததால் காங்கிரசின் மீது ஏற்பட்ட வெறுப்பு – ஒய்எஸ்ஆர் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் மீது காங்கிரஸ் வாரியிறைத்த ஊழல் குற்றச்சாட்டுகளினால் அவர் மீது ஏற்பட்ட அவநம்பிக்கை – நாயுடுவின் பழைய ஆட்சியில் நிகழ்ந்த வளர்ச்சிகள் – போன்ற மற்ற அம்சங்களும் சேர்ந்து கொள்ள நாயுடு இந்த முறை மிக எளிதாக மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கின்றார்.

ஆந்திர மக்களின் தெய்வக் கடவுளாகப் பார்க்கப்பட்ட என்.டி.இராமராவின் சினிமா கவர்ச்சியினால் ஆட்சிக்கு வந்த தெலுகு தேசம் பின்னர் அவரது சொந்த மருமகன் நாயுடுவின் தலைமைத்துவ ஆற்றலால் – எளிமையான அணுகுமுறையால் – மக்களின் ஆதரவைப் பெற்றது.

இன்று,

சினிமா கவர்ச்சி ஏதும் இல்லாமல் – தங்களின் மேம்பாட்டுக் கொள்கை – நாயுடுவின் தலைமைத்துவ ஆற்றல் ஆகியவற்றை மட்டுமே முன்வைத்து இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றியிருக்கின்றனர் தெலுகு தேசம் கட்சியினர்.

மத்தியிலும் தங்களின் பாஜக கூட்டணி என்பதால் – சுலபமாக நிர்வகிக்க அளவால் சிறிய மாநிலம் என்பதால் – இனி சீமந்திராவில் நாயுடுவின் அதிரடி ஆட்டத்தால் மேம்பாடுகள் – வளர்ச்சித் திட்டங்கள் உடனடியாக நிறைவேறத் தொடங்கும் என நம்பலாம்.

– இரா.முத்தரசன்