புதுடில்லி, மே 24 : மோடி பதவியேற்பு விழாவிற்கு, இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கு, நல்லுறவு நோக்கிலேயே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
தனது பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தானை அழைத்துள்ள காரணத்தால் வட இந்தியாவில் எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வரும் வேளையில், தமிழ் நாட்டில் இலங்கை அதிபர் வருகைக்கு எதிராக எதிர்ப்புகள் பெருகி வருகின்றன.
ராஜபக்சே வருகைக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என வைகோ அறிவித்துள்ளார்.
இந்நிலையில், புதுடில்லியில் தனியார் தொலைக்காட்சி அலைவரிசைக்கு பேட்டியளித்த பா.ஜ. க. செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன் ராஜபக்சே வருகை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
“ராஜபக்சே, மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கத்தான் வருகிறாரே தவிர, இங்கு எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்த வாய்ப்பில்லை. தனியாக இருவரும் சந்தி்க்கும் பட்சத்தில் கூட, இருநாட்டு நல்லுறவு குறித்து தான் பேசுவார்களே தவிர, மற்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட மாட்டாது. இருநாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக இருந்தால், அதற்கு பல முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது” என்று நிர்மலா கூறியுள்ளார்.