Home நாடு மலேசியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் 3 பேர் கைது

மலேசியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் 3 பேர் கைது

540
0
SHARE
Ad

LTTE 440 x 215கோலாலம்பூர், மே 25 – பெட்டாலிங் ஜெயா மற்றும் கிள்ளான் நகர்களில் மேற்கொள்ளப்பட்ட மலேசியக் காவல் துறையின் அதிரடி வேட்டையில் , தடை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல் துறையின் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த (Special Branch) பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் அதிகாரிகள் கடந்த மே 15ஆம் தேதி இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டதாக தலைமை காவல் துறை அதிகாரி டான்ஸ்ரீகாலிட் அபு பாக்கார் தெரிவித்துள்ளார்.

ஆரம்ப கட்ட புலன் விசாரணைகளின் வழி, கைது செய்யப்பட்டவர்கள் 2004ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக மலேசியாவிற்குள் நுழைந்ததாகவும், மலேசியாவைத் தளமாகப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பிரச்சாரங்களை மேற்கொண்டதாகவும், அந்த இயக்கத்தின் அனைத்துலக நடவடிக்கைகளை உயிர்ப்பிக்க முயற்சிகள் மேற்கொண்டதாகவும் தெரிய வந்துள்ளதாகவும் காலிட் அபு பாக்கார் கூறினார்.

#TamilSchoolmychoice

கைது வேட்டையின்போது, பிரச்சாரக் கையேடுகள், தகவல் சாதனங்கள், மலேசிய ரிங்கிட் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதிப்புடைய 24 நாடுகளைச் சேர்ந்த அந்நிய நாட்டு ரொக்கப் பணம், ஆகியவை கைப்பற்றப்பட்டதாகவும் தான் வெளியிட்ட அறிக்கையில் காலிட் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள், இங்கே தங்குவதற்காகவும், உள்நாட்டு அரசாங்க இலாகாக்களின் நடவடிக்கைகளைத் தவிர்க்கும் நோக்கிலும் ஐக்கிய நாட்டு சபையின் அகதிகளுக்கான அடையாள அட்டையை வைத்திருந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவரில் ஒருவர் பதிவில் இல்லாத ஒரு நிறுவனத்தின் பெயரில் வெளியிடப்பட்ட வேலை அனுமதி (பெர்மிட்) ஒன்றை வைத்திருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரும் தற்போது குடிநுழைவுத் துறை இலாகாவினரால் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஐநாவின் அகதிகள் தூதரகத்தோடு அணுக்கமாகப் பணியாற்றுவதன் மூலம் மலேசியாவில் தங்க அனுமதிக்கப்படும் அகதிகள் தங்களின் பயண அனுமதிகளை தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் மலேசியா மற்றும் மற்ற நாடுகளுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் தடுப்பதற்கு மலேசியக் காவல் துறை எல்லாவகையிலும் பாடுபடும் என்றும் காலிட் மேலும் கூறியுள்ளார்.

-பெர்னாமா