ஸ்டாக்ஹோம், மே 28 – எதிர் எதிர் துருவங்களாகிப்போன ஜப்பானும், வடகொரியாவும் சுவீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமில் நேற்று முன்தினம் மூன்று நாள் பேச்சுவார்த்தையைத் துவக்கின.
இரு நாடுகளுக்கிடையே, கடந்த 16 மாதங்களில் மார்ச் மாதத்தில் சீனாவில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைக்குப்பின் நடைபெறும் இரண்டாவது சந்திப்பு இதுவாகும். இதில் கடத்தல் பிரச்சினை, கொரியாவின் சமீபத்திய ஏவுகணைப் பயன்பாடுகள் மற்றும் அணு ஆயுதத் திட்டங்கள் போன்றவை முக்கிய அம்சங்களாக இடம் பெறுகின்றன.
கடந்த 1970-80களில் தங்களுடைய ஒற்றர்களுக்கு ஜப்பானிய மொழியையும், பழக்கவழக்கங்களையும் கற்றுத்தருவதற்காக 13 ஜப்பானியர்களை வடகொரியா கடத்திச் சென்றது, ஜப்பானுக்கு பெருங் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. இவர்களில் ஐந்து பேரை விடுவித்த வடகொரியா மற்றவர்கள் குறித்து எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் அவர்கள் இறந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியிட்டது.
இந்தப் பிரச்சினையை முன்னிறுத்தும் ஜப்பான் இதுகுறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால், அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள சில பொருளாதாரத் தடைகளை விலக்கிகொள்ளுவதாக அறிவித்துள்ளது.
ஸ்டாக்ஹோம் பேச்சுவார்த்தை குறித்து கடந்த வாரம் ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் பியுமியோ கிஷிடா கூறுகையில், “இந்த கடத்தல் பிரச்சினை ஜப்பானின் மிகப் பெரிய கவலைகளில் ஒன்று. இதற்கான தீர்வையே விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.