ஜோர்ஜ்டவுன், மே 28 – கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட மூவரும் விடுதலைப் புலிகள் தான் என்று தேசிய போலீஸ் தலைவர் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் நிரூபித்து, அதன் ஆதாரத்தைக் காட்ட முடியுமா? என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி சவால் விடுத்துள்ளார்.
இலங்கையில் உள்ள விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் முடங்கிப் போய் பல காலம் ஆகிவிட்டது. கைது செய்யப்பட்ட மூவரும் குடிநுழைவு இலாகாவினரிடம் பிடிபடாமல் இருப்பதற்கு, ஐ.நா பாதுகாப்பு அட்டையை வைத்திருக்கின்றனர்.
இந்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாகி விட்டதாக காலிட் எப்படி கூற முடியும்? இவர்கள் இலங்கையிலிருந்து தகவல் கிடைத்ததும் எந்தவொரு ஆய்வும் செய்யாமல் நடவடிக்கை எடுத்துள்ளனர். இம்மூவரும் தமிழ் அகதிகள் தான் விடுதலைப் புலிகள் அல்லர் என்று ராமசாமி தெரிவித்தார்.
(சந்தேக நபரை காவல்துறை கைது செய்து அழைத்துச் செல்கிறது)
இதன் அடிப்படையில் அப்படியே உண்மையான சான்றுகள் ஏதேனும் இருந்தால் காலிட் தைரியமாக வெளியிட வேண்டும். நான் அவருடன் விவாதம் நடத்தத் தயார். அடைக்கலம் தேடிவந்த அகதிகளை வெறுமனே கைது செய்ய வேண்டாம் என்றும் அவர் நேற்று இங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.
பெட்டாலிங் ஜெயா, கிள்ளான் பகுதிகளில் கடந்த 15-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அனைத்துலக ரீதியில் விரிவுபடுத்துவதற்கு இந்நாட்டை அடித்தளமாக உருவாக்குவதற்காக அவர்கள் 2004 -ம் ஆண்டில் மலேசியாவில் நுழைந்துள்ளனர் என்று காலிட் இதற்கு முன்னர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
படம்: EPA