பெய்ஜிங், மே 28 – சீனாவிற்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அங்கு காணாமல் போன மாஸ் விமானத்தின் பயணிகளின் உறவினர்களை சந்திப்பாரா? என தகவல் ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
தங்களுக்கென ஓர் அதிகாரத்துவ இணையப் பக்கத்தை உருவாக்கியுள்ள சீனப் பயணிகளின் உறவினர்கள் கடந்த திங்கட்கிழமை அந்த இணையப் பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர். அதில் நஜிப் துன் ரசாக்கை நேரடியாக சந்திக்க தாங்கள் தொலைபேசி, மின்னஞ்சல் மற்றும் கடிதங்களின் வாயிலாக மாஸ் நிறுவனத்திடமும் மலேசிய-சீன அரசாங்கத்திடமும் கோரிக்கைகள் விடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நஜிப்பை சந்திக்கும் தங்களின் கோரிக்கை அவருக்கு உண்மையிலேயே தெரியுமா? என்றும் அவர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர். ஆனால், இப்படி ஒரு கோரிக்கை இருந்தது எங்களுக்கு தெரியாது என சீன வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பயணிகளின் உறவினர்கள் சார்பாக பேசிய ஒருவர், நஜிப்பை சந்திக்க வாய்ப்புக் கிடைத்தால் பாதிக்கப்பட்ட பயணிகள் குடும்பங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து எடுத்துக் கூற எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்தார்.
இந்தக் குழுவினரின் நட்பு ஊடகங்களின் வாயிலான வற்புறுத்தலின் காரணமாகத் தான் நேற்று அசல் துணைக் கோளப் படங்களை மலேசிய அரசாங்கம் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆஸ்திரேலியா மட்டுமே தலைமை வகித்து காணாமல் விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
திடீரென ஒரு நாள், நாங்கள் தேடுதலை நிறுத்தப் போகிறோம் என்று ஆஸ்திரேலியா அறிவித்தால், அதன் பின்னர் காணாமல் போன விமானத்தின் உரிமையாளர் என்ற முறையில் மலேசியா என்ன செய்யப் போகிறது? என்றும் அந்தப் பயணிகளின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.