பெய்ஜிங், மே 29 – நேற்று இயற்கை எய்திய பேராக் மாநில சுல்தான் அஸ்லான் ஷாவுக்கு (படம்) இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, சீனாவில் இருந்து பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று இரவு மலேசியா திரும்பினார்.அவருடன் அவரது துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோரும் நாடு திரும்பினார்.
மலேசியா –சீனா இடையிலான 40 ஆண்டு கால நல்லுறவை நினைவு கூறும் வகையில் சீனாவிற்கு நஜீப் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று பேராக் சுல்தானின் திடீர் மறைவை அறிந்து அவசர அவசரமாக நாடு திரும்பிய நஜீப், கோலகங்சாரில் நடந்த இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு மரியாதையை செலுத்திவிட்டு, இன்று வியாழக்கிழமை சீனாவுக்கு மீண்டும் செல்கிறார்.
இன்று சீனாவில் தியான்ஜினுக்கு பிரதமர் விரைவு ரயிலில் செல்ல வேண்டும். அங்கு அவர் சியாண்டா ஒருங்கிணைந்த நீர் சுத்திகரிப்பு, உப்பு ஆலை திட்டங்களைத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்.
இவ்விரு ஆலைகளும் நங்காங் தொழில் பேட்டைப் பகுதியில் அமைக்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் பிரதமரின் சார்பாக தற்காப்பு அமைச்சரும் இடைக்கால போக்குவரத்து அமைச்சருமான டத்தோ ஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹுசேன் கலந்து கொள்கிறார்.