மாஸ்கோ, மே 31 – அமெரிக்காவின் நாசா விண்வெளி வீரர்களுடன் ரஷ்யா மற்றும் ஜெர்மனி நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் சென்ற விண்கலம் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) சென்றடைந்தது.
இது குறித்து ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு மையமான ராஸ்கோஸ்மாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது, “3 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெற்றிகரமாக சென்றடைந்துள்ளனர்” என்று கூறியுள்ளது.
ரஷ்யாவின் மேக்ஸிம் சுராயெவ், நாசாவின் வைஸ்மேன், ஜெர்மனி யின் அலெக்சாண்டர் கெர்ஸ்ட் ஆகியோர் திட்டமிட்டதற்கு சுமார் 2 மணி நேரம் தாமதமாகவே சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை சென்றடைந்தனர். எனினும் இந்த தாமதத்தால் பிரச்சினை ஏதும் ஏற்படவில்லை என்று ராஸ்கோஸ் மாஸ் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று வீரர்களும் கஜகஸ்தானில் உள்ள மையத்தில் இருந்து சோயூஸ் விண்வெளி ஓடத்தில் புறப்பட்டுச் சென்றனர்.
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கும் இடையே பனிப் போர் நிலவி வந்தாலும் விண்வெளித் துறையில் அந்நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு சிறப்பாக உள்ளதை இந்த நிகழ்வு உறுதிப்படுத்தியுள்ளது.