Home அவசியம் படிக்க வேண்டியவை சிறையில் இருக்கும் உதயகுமார் பிரச்சனை அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தின் பார்வைக்கு செல்கிறது  

சிறையில் இருக்கும் உதயகுமார் பிரச்சனை அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தின் பார்வைக்கு செல்கிறது  

739
0
SHARE
Ad

Uthayakumar-Featureகோலாலம்பூர், ஜூன் 1 – சிறையில் வாடும் ஹிண்ட்ராஃப் தலைவர்களில ஒருவரான உதயகுமாரின் பிரச்சனையை அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தின் பார்வைக்கு ஹிண்ட்ராஃப் இயக்கம் கொண்டு செல்கின்றது.

உதயகுமார் சிறையில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து உண்மையைக் கண்டறியும் ஆய்வொன்றை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் மேற்கொள்ள வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறையில் இருக்கும் உதயகுமார் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திற்கு எழுதிய கடிதம் ஒன்றையும் கடந்த புதன்கிழமை ஹிண்ட்ராஃப் இயக்கத்தினர் அந்நிறுவனத்தின் அலுவலகத்தில் வழங்கினர்.

#TamilSchoolmychoice

சிறையில் இருக்கும் தன்னையும், மற்றும் பாதிக்கப்பட்ட மற்ற கைதிகளையும் சந்தித்து, சிறை அதிகாரிகளின் கெடுபிடிகளில் சிக்கியிருக்கும் கைதிகளின் பரிதாப நிலையை செஞ்சிலுவைச் சங்கம் ஆராய வேண்டுமென உதயகுமார் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாகப் பிளவுபட்டுக் கிடக்கும் ஹிண்ட்ராஃப் இயக்கத்தின் ஒரு பிரிவுக்கு உதயகுமார் தலைமை தாங்குகின்றார்.

மற்றொரு பிரிவுக்கு வேதமூர்த்தி தலைமை தாங்குகின்றார்.

அதே வேளையில் மனித உரிமைக் கட்சியின் தலைமைச் செயலாளராகவும் உதயகுமார் இருந்து வருகின்றார். ஆனால், இந்தக் கட்சி இன்னும் சங்கப் பதிவதிகாரியால் அதிகாரபூர்வமாகப் பதிவு செய்யப்படவில்லை.

இந்திய சமுதாயத்திற்கு எதிராக இன அழிப்பு நடவடிக்கையை மலேசிய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது என உதயகுமார் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து அவர் மீது குற்றவியல் சட்டங்களின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால், வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, எதிர்வாதம் புரியாமல் மௌனம் காத்த காரணத்தால், உதயகுமார் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

“சிறையில் கைதிகளை அடிப்பது, விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் மருத்துவ தேவைகளை நிராகரிப்பது போன்ற நடைமுறைகளால் கைதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த துன்புறுத்தல்கள், மனிதாபிமானமற்ற குரூரமான மட்டகரமான முறையில் கைதிகளை நடத்துகின்ற விதம் ஒரு முடிவுக்கு வரவேண்டும். அதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும்” என மலேசிய செஞ்சிலுவைச் சங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தில் உதயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தின் கோலாலம்பூர் பிரதிநிதியான மாக்ஸ் விக்மேன் என்பவரிடம் ஹிண்ட்ராஃப் பிரதிநிதி ஜே.வசந்தா இந்த கடிதத்தை ஒப்படைத்தார்.

இதே போன்றதொரு புகார் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் பார்வைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.