சென்னை, ஜூன் 4 – நடிகை லட்சுமிராய் தனது பெயரை “ராய் லட்சுமி” என மாற்றியுள்ளார். சிறு குழந்தையாக உள்ள போது வைக்கப்படுகின்ற பேர் என்பது வெறும் அடையாளம் மட்டுமல்ல, அதையும் தாண்டி அதற்கு சில குணாதிசயங்கள் உண்டு என சிலர் நம்புகின்றனர்.
அதனால் தான் பெயரின் சில எழுத்துக்களைக் கூட்டி அல்லது குறைத்தாலோ அல்லது பெயரையே மாற்றினாலோ தங்களது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டுவிடும் என அவர்கள் கருதுகிறார்கள்.
இவ்வாறு எண்கணித அடிப்படையில் பெயரை மாற்றுவது நியூமராலஜி எனப்படுகிறது. சாதாரண மக்களைக் காட்டிலும் திரைத் துறையினர் அல்லது தொழிலதிபர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் இவ்வாறு பெயர் மாற்றம் செய்யும் போது அது செய்தியாகிவிடுகிறது.
அந்தவகையில் தற்போது தனது பெயரை மாற்றியுள்ளார் நடிகை லட்சுமி ராய். இது தொடர்பாக லட்சுமிராய் கூறியதாவது, “பெற்றோர் எனக்கு லட்சுமி என பெயர் வைத்தனர். அந்த பெயரை வைத்து யாரும் என்னை அழைப்பது இல்லை.
சிலர் ‘ராய்’ என்று கூப்பிட்டனர். இன்னும் சிலர் லட்சிராய் என்றார்கள். வீட்டில் கூட என்னை ராய் என்றே அழைத்தார்கள். பிறகு சினிமாவிலும் லட்சுமிராய் என்றே அழைக்கப்பட்டேன்.
இந்த பெயரை மாற்ற வேண்டும் என்று நீண்ட நாட்களாக யோசித்து வந்தேன். இப்போது நடந்துள்ளது. புதிய பெயரை வைத்துக் கொள்ளவில்லை. ஏற்கனவே இருந்த லட்சுமி ராய் என்ற பெயரைதான் “ராய் லட்சுமி” என்று மாற்றி உள்ளேன்.
ராய் என்பதில் கூடுதலாக ஒரு ஆங்கில ‘ஏ’ எழுத்தை சேர்த்து இருக்கிறேன். இனி வரும் படங்களில் என் பெய்ரை இவ்வாறே போடுமாறு படக்குழுவினரிடம் தெரிவித்துள்ளேன்” என லட்சுமி ராய் கூறியுள்ளார்.
லட்சுமிராய் அரண்மனை, இரும்புக்குதிரை படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். கன்னட, மலையாள படங்களும் இவர் கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பெயர் மாற்றத்திற்கான காரணமாக அவரது நெருங்கிய நண்பர்கள் கூறுகையில், ‘சமீபகாலமாக அதிரடி ஆக்ஷன் படங்களில் நடித்து வருகிறார் லட்சுமி ராய். ஆனால் அவரது பெயரை உச்சரிக்கும் போது அது மென்மையாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. ராய் லட்சுமி என மாற்றி உச்சரிக்கும் போது கம்பீரமாக இருப்பதாக அவர் உணர்கிறார்’ எனத் தெரிவித்துள்ளனர்.