டெல்லி, ஜூன் 13 – இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி 3 கோடி டாலர் வருமானம் ஈட்டியுள்ளார். இதன் அடிப்படையில் சர்வதேச அளவில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் அவர் 22-வது இடத்தில் உள்ளதாக போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் போர்ப்ஸ் வணிக பத்திரிகை பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் அதிக வருமானம் ஈட்டும் கோடீஸ்வரர்களின் பட்டியலை போர்ப்ஸ் அவ்வப்போது தயாரித்து வெளியிட்டு வருகிறது. தற்போது உலகில் அதிகம் சம்பாதிக்கும் 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலை வரிசைப்படுத்தியுள்ளது.
சம்பளம், பரிசுப் பணம், போனஸ் மற்றும் விளம்பரங்கள் வாயிலாக விளையாட்டு வீரர்கள் எவ்வளவு சம்பாதிக்கின்றனர் என்பதை வெளியிட்டுள்ள இந்தப் பத்திரிகை, 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான 12 மாதங்களில் கிரிக்கெட் வீரர் டோனி 3 கோடி டாலர் சம்பாதித்து 22-வது இடத்தில் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளது.
இதில் விளம்பரம் வாயிலாக அவர் சம்பாதித்த 2.60 கோடி டாலரும், சம்பளம் மற்றும் பரிசுகள் வாயிலாக பெற்ற 40 லட்சம் டாலரும் அடங்கும். போர்ப்ஸ் பட்டியலில் பிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரர் ப்ளாய்ட் மேவெதர் 10.50 கோடி டாலர் வருமானத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக அவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ 8 கோடி டாலர் வருவாயுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அமெரிக்க கூடைப்பந்து வீரர் லீபுரோன் ஜேம்ஸ் 7.20 கோடி டாலர் வருவாயுடன் 3-வது இடத்திலும், அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயனல் மெஸ்சி 6.50 கோடி டாலர் வருமானத்துடன் 4-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.