பாங்காக், ஜூன் 14 – இராணுவ ஆட்சி நடைபெறும் தாய்லாந்தில் செப்டம்பர் மாதத்துக்குள் புதிய இடைக்கால அரசு அமைக்கப்படும் என்று அந்நாட்டின் இராணுவ ஆட்சியாளர் பிரயூத் ஓசா அறிவித்துள்ளார்.
உள்நாட்டு கலவரம் காரணமாக ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவம் 35000-க்கும் மேற்பட்ட மக்களை கைது செய்து சிறையில் அடைத்தது. உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் தனது நிலைப்பாட்டில் மாறாத அந்நாட்டு இராணுவம், அமைதி மற்றும் சீர்திருத்தத்தை கொண்டுவர ஓராண்டுக்கும் மேலாகும், எனவே தற்போது தேர்தலை கொண்டுவர இயலாது என ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்நிலையில், தாற்காலிக அரசியல் சாசனம் வரைவு செய்யப்பட்டு, 3 மாதங்களுக்குள் இடைக்கால அரசு நிறுவப்படும் என்று இராணுவ ஆட்சியாளர் பிரயூத் நேற்று அறிவித்துள்ளார்.
புதிய அரசு அமைக்கப்பட்டதை அடுத்து, அரசியல் சீர்திருத்தம் கொண்டுவருவதற்கான கூட்டம் அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தாய்லாந்து முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ராவின் அரசுக்கு எதிராக அந்நாட்டில் போராட்டம் வெடித்ததை அடுத்து ஷினவத்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டு, கடந்த மே 22-ம் தேதி இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.