லாகாட் டத்து (சபா) ஜூன் 16 – இன்று திங்கட்கிழமை அதிகாலையில் சபா கிழக்குக் கரையில் குனாக் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு மீன் பண்ணையிலிருந்து பிலிப்பைன்ஸ் துப்பாக்கிக்காரர்களால் கடத்தப்பட்ட இருவரில் ஒருவர் தப்பி வந்துள்ளார்.
மஸ்லான் என்று மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ள ஒரு தொழிலாளி துப்பாக்கிக்காரர்களின் விசைப் படகிலிருந்து வெளியில் குதித்துள்ளார். அதேவேளையில் கடத்தப்பட்ட பேராவைச் சேர்ந்த மீன் பண்ணைக்காரர் 32 வயதான சான் சாய் சியுன் எங்கிருக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை.
கடத்தப்பட்டவர்களோடு, துப்பாக்கிக்காரர்களின் விசைப் படகு வேகமாக தப்பிச் சென்ற போது மஸ்லான் அந்தப் படகிலிருந்து தப்பியதாக நம்பப்படுகிறது.
அவர் கரைக்கு நீந்தி வந்து காவல் துறையில் புகார் செய்துள்ளார்.
(கடத்தப்பட்ட மீன் பண்ணை நிர்வாகி சான் சாய் சியுனின் புகைப்படத்தைக் காட்டும் காவல்துறை அதிகாரி)
லாகாட் டத்துவிலிருந்து சுமார் 60 கிலோ மீட்டர் அப்பாலுள்ள குனாக்கில் அந்த மீன் பண்ணை உள்ளது. இன்று திங்கட்கிழமை அதிகாலை வேளையில் அந்தத் துப்பாக்கிக்காரர்கள் சானையும் மஸ்லானையும் கடத்தினர்.
முக மூடி அணிந்திருந்த துப்பாக்கி ஏந்திய இருவர் கும்மிருட்டு வேளையில் அந்த மீன் பண்ணையின் தொழிலாளர் குடியிருப்பில் நுழைந்துள்ளனர்.
தங்களின் அறைகளில் தூங்கிக் கொண்டிருந்த சானையும் மஸ்லானையும் கடத்தல்காரர்கள் பிடித்துக் கொண்டு விசைப் படகு ஒன்றில் அவர்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டனர்.
அந்த சமயத்தில் அத்துப்பாக்கிக்காரர்களுக்கு உடந்தையாக மேலும் இருவர் மற்றொரு படகில் காத்திருந்தனர் எனஎனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த விசைப்படகு வேகமாக சென்றபோது மஸ்லான் மட்டும் அதிலிருந்து தப்பியுள்ளார்.
கடத்திச் செல்லப்பட்டுள்ள சான் சாய் சியூனின் புகைப்படத்தை பின்னர் காவல் துறையினர் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது வெளியிட்டனர்.
கடத்தல்காரர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகின்றது.