லஹாட் டத்து, ஜூன் 17 – பிலிப்பைன்ஸ் துப்பாக்கிக்காரர்கள் அடிக்கடி ஊடுருவுவதால், சபா மாநிலம் லஹாட் டத்து உள்ளிட்ட பகுதிகளில் எப்போதும் பதட்டமான சூழ்நிலையே நிலவி வருகின்றது.
படகு மூலமாக மலேசியாவிற்குள் ஊடுரும் ஆயுதமேந்திய கும்பல் அங்கு வாழும் மக்களை கடத்திக் கொண்டு போய் பணையக் கைதிகளாக வைத்து பேரம் பேசுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
இந்நிலையில், நேற்று அதிகாலையில் துப்பாக்கிக்காரர்களால் கடத்திச் செல்லப்பட்ட மீன் பண்ணைக்காரர் சான் சாய் சுயின் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார் என்ற விபரம் தெரியவில்லை.
“என் குடும்பத்தை தொந்தரவு செய்யாதீர்கள், நான் உங்களுடன் வருகிறேன்” என்று கடைசியாக தன் கணவர் மலாய் மொழியில் கூறியதாக, சான் சாயின் மனைவி சின் பேக் நியென் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
குனாக் பகுதியில் கம்போங் சாபாங்கில் என்ற இடத்தில் உள்ள தங்களது மீன் பண்ணையில் அதிகாலையில் உறங்கிக் கொண்டிருந்த போது, பண்ணைக்கு வெளியே நாய் குரைக்கும் சத்தம் கேட்டதாகவும், தன் கணவர் வெளியே சென்று பார்த்த போது, துப்பாக்கி ஏந்திய இருவர் கணவரை துப்பாக்கி முனையில் நிற்க வைத்தனர் என்றும் சின் பேக் தெரிவித்துள்ளார்.
இதை தான் கண்டவுடன் உடனடியாக வீட்டிற்குள் சென்று கதவை தாளிட்டுக் கொண்டதாகவும், வீட்டின் உள்ளே தங்களது குழந்தை உறங்கிக் கொண்டு இருந்ததாகவும் சின் பேக் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
“அவர்கள் கதவை பலமுறை பலமாக தட்டினார்கள். நான் திறக்கவில்லை காரணம் என் இரண்டு வயது மகள் அறையில் உறங்கிக் கொண்டு இருந்தாள். அதன் பின்னர், 15 நிமிடங்கள் கழித்து படகு புறப்படும் சத்தம் கேட்ட பின்னர் தான் வெளியே வந்தேன்” என்று சின் பேக் தெரிவித்துள்ளார்.
“கடத்தல்காரர்களுக்கு மலாய் மொழி புரிந்திருக்க வேண்டும். அதனால் தான் என் கணவர் அவர்களிடம் முறையிட்டவுடன் அவர்கள் என்னிடம் வரவில்லை” என்றும் சின் பேக் கூறியுள்ளார்.
பேராக் மாநிலம் ஈப்போவைச் சேர்ந்த சான் சாய், கடந்த ஏப்ரல் மாதம் தான் குடும்பத்தோடு மீன் பண்ணை தொழில் செய்ய குனாக் பகுதியில் குடியேறினார்.
சான் சாய் உடன் மற்றொரு தொழிலாளி ஒருவரும் பணையக் கைதியாக படகில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். எனினும் அவர் படகில் இருந்து கடலில் குதித்து தப்பி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.