சென்னை, ஜூன் 17 – காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக, பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், தி.மு.க.,வை வீண் வம்புக்கு இழுத்துள்ளார் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இம்மாதம் 13-ஆம் தேதி, பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா எழுதியகடிதத்தில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இம்மாதம் 10-ஆம்தேதி, ஜெயலலிதா எனக்கு பதிலளித்து வெளியிட்ட அறிக்கையில், அதை செயல்படுத்த பிரதமருக்கு கால அவகாசம் தர வேண்டும் என அவர் எழுதியதை, அவரே மறந்து விட்டார்.
பிரதமருக்கு, முதல்வர் எழுதிய கடிதத்தில் தேவையில்லாமல், தி.மு.க.,வை வீண் வம்புக்கு இழுத்துள்ளார். ஏற்கனவே, ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசை வற்புறுத்தவில்லை என்ற குற்றச்சாட்டையும் கூறியுள்ளார்.
நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கிய போதும், கர்நாடக அரசே பார்த்து தண்ணீர் திறந்து விட்டால் தான் உண்டு, என கூறியவர் தான் ஜெயலலிதா.
இடைக்கால ஆணையை நடைமுறை படுத்துவது பற்றி, மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு, ஒன்பது மாத கால தாமதத்திற்கு பின், பதில் அனுப்பியவர் தான் ஜெயலலிதா.
நடுவர் மன்ற இடைக்கால ஆணையை நடைமுறைப்படுத்த, 1991 முதல் 1996 வரை ஐந்தாண்டு காலம் ஆட்சியில் இருந்த ஜெயலலிதா, எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
பிரதமராக இருந்த வி.பி.சிங்கிடம், அ.தி.மு.க., சார்பில் கொடுத்த மனுவில், 1974-ஆம் ஆண்டோடு, காவிரி ஒப்பந்தம் முடிந்து விட்டது என, எழுதிக் கொடுத்தவர் தான் ஜெயலலிதா.
தொடர்ந்து, 2002ல் காவிரி ஆணையக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல், ரத்து செய்தவர் ஜெயலலிதா. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் என கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.