ஜூன் 19 – உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் சாம்சங், தங்களுக்கு இடையே நிலவும் வழக்குகளை ஒத்தி வைத்து விட்டு, மிக முக்கிய வர்த்தகத்தினை மேம்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் ஒன்றன் மீது ஒன்று கருவிகள் மற்றும் மென்பொருள் தொடர்பான காப்புரிமை கோரி பல வழக்குகள் தொடர்ந்தன. நிலவில் உள்ள சில வழக்குகள், நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன. பல வழக்குகளில் ஆப்பிளின் கை ஓங்கியுள்ளது.
இந்த நிலையில் இரு நிறுவனங்களும் தங்கள் மீதான வழக்குகளை ஒத்தி வைத்து விட்டு, தங்களுக்கிடையே நடைபெறும் வர்த்தகத்தினை மேம்படுத்த திட்டமிட்டுள்ளாதாகத் தெரிய வருகின்றது. சாம்சங் நிறுவனம் ஆப்பிளின் எ-சீரீஸ் ஐ-போன்களுக்கான செயலிகளை வழங்கி வருகின்றது. மேலும், ஆப்பிள் உருவாக்கி வரும் ‘ஐ-வாட்ச்’ (i-watch) க்கான OLED திரைகளை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தினை எதிர்நோக்கி உள்ளது.
ஆப்பிள் நிறுவனமும் சாம்சங் உடன் தனது வர்த்தகத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக தொழில்நுட்ப பத்திரிக்கைகள் கூறுகின்றன.
இரு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையிலான காப்புரிமை வழக்கில், சாம்சங், ஆப்பிள் நிறுவனத்திற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டயீடாக கொடுத்தது குறிப்பிடத்தக்கது.