சென்னை, ஜூன் 21- திரைப்பட நடிகரான ஜெய்க்கு சமீபகாலமாக கார் பந்தயங்களில் மோகம் அதிகரித்துள்ளது. இதன் விளைவாகத் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்த அவர் வரும் ஞாயிறன்று சென்னையில் நடைபெற உள்ள தேசிய கார் பந்தயத்தில் முதன்முறையாகக் கலந்துகொள்கின்றார்.
இதுபற்றி அவர் கூறியதாவது, ”சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ள தேசிய கார் பந்தயப் போட்டியில் நாடு முழுவதிலுமிருந்து போட்டியாளர்கள் கலந்துகொள்வார்கள். இரண்டு சுற்றுகள் சென்னையிலும், அதற்குப் பின்னர் கோயம்புத்துரிலும் நடைபெறும் இந்தப் பந்தயத்தின் இறுதிப்போட்டி புதுடெல்லியில் நடைபெற உள்ளது.
பார்முலா பந்தயத்தில் பங்கு பெற விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்த போட்டி அடிப்படையானதாகும். நான் கடந்த ஏழு மாதங்களாகப் பயிற்சி பெற்று வரும்போதும் பதட்டமாக உணருகின்றேன். மொத்தம் 29 பேர் இதில் பங்கு பெறுகின்றனர். எல்லோரும் இறுதி நிலையை எட்டுவார்களா என்பது தெரியவில்லை.
எனக்கு பயிற்சி அளித்துள்ள பொறியாளர்களும், பயிற்சியாளரும் முதல் ஐந்து இடத்திற்குள் நான் முடிக்கவேண்டும் என்று கூறியுள்ளனர். சிறு வயதிலிருந்தே கார் பந்தயத்தில் எனக்கு விருப்பம் இருந்தபோதும் அப்துல்லா என்ற வீரரை சந்தித்தபின்னரே என்னுடைய தனிப்பட்ட ஆர்வம் அதிகரிக்கத்தொடங்கியது.
என்னால் திரைப்படங்களில் நடித்துக்கொண்டே கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தமுடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் இரு துறைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தும் நடிகர் அஜீத்தைப் பற்றி குறிப்பிட்டபோது என் தைரியம் வளர்ந்தது.
அதுமுதல் ஞாயிற்றுக்கிழமைகளில் கார் பந்தயத்தில் நான் தனிப்பட்ட கவனம் செலுத்தத் தொடங்கினேன். எனது இந்த ஆர்வத்திற்கு தடை ஏற்படாதவண்ணம் தயாரிப்பாளர்களும் எனது கால்ஷீட்டை பயன்படுத்திக் கொள்கின்றார்கள் என ஜெய் தெரிவித்தார்.