வாஷிங்டன், ஜூன் 28 – இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்த விடுத்தலைப் புலிகளுக்கு எதிரான போரில் அனுமதிக்கவே முடியாத அளவில் மனித உரிமை மீறல் நடந்ததாக ஐ.நா. மனித உரிமை அமைப்பு இலங்கை மீது குற்றம் சாட்டியது. மேலும், இது தொடர்பான நீதி விசாரணையை மேற்கொள்ள 3 உறுப்பினர்களை கொண்ட குழுவை அந்த அமைப்பு நியமனம் செய்தது. இதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ஃப் கூறியதாவது:-
“இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிக் கட்டப் போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட வல்லுநர் குழுவினை ஐ.நா. மனித உரிமை அமைப்பின் ஆணையர் நவநீதம் பிள்ளை நியமித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஐ.நா. குழுவினரின் விசாரணைக்கு இலங்கை அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.”
“இலங்கை அரசு தனது நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தும்.”
“ஜனநாயகம், மனித உரிமை மீறல்கள், நல்லிணக்கம், நீதி மற்றும் கடமை தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்க உறுதியான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும். இந்தப் பிரச்னைகள் தொடர்பாக இலங்கை அரசுக்கு உதவ அமெரிக்கா எப்போதும் தயாராகவே உள்ளது” என்று மேரி ஹார்ஃப் கூறியுள்ளார்.