கோலாலம்பூர், ஜூன் 27 – ஏற்கெனவே 6 தமிழ் தினசரி பத்திரிகைகள் மலேசியாவில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையில், தற்போது 7ஆவது பத்திரிகையாக தாய்மொழி என்ற பெயரில் மற்றொரு தமிழ் தினசரி உதயமாகியுள்ளது.
எந்த ஒரு காலகட்டத்திலும் இத்தனை தமிழ்ப்பத்திரிகைகள் மலேசியாவில் வெளிவந்ததில்லை.
இது மலேசிய தமிழ் வாசகர்களுக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் தமிழ்மொழியை வளர்க்க நினைப்பவர்களுக்கும் இனிப்பான செய்திதான் என்றாலும்,
இதனால் தமிழ்ப்பத்திரிகைகளுக்கு இடையே கடுமையான வர்த்தக போட்டி தலைதூக்கியுள்ளதோடு எந்தப் பத்திரிகையை வாங்குவது என்ற சிக்கலும் தமிழ் பத்திரிகை வாசகர்களுக்கு எழுந்துள்ளது.
தாய்மொழி பத்திரிகை டான்ஸ்ரீ கேவியஸ் தலைமையிலான பிபிபி கட்சியின் அரசியல் செய்திகளை நிறைய தாங்கி வெளி வருகின்றது.
இதற்கிடையில், கூடிய விரைவில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உள்துறை அமைச்சால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட தினக்குரல் நாளிதழ் அடுத்த சில தினங்களில் வெளி வரக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு தினக்குரல் வெளிவரும் என்றால் அதோடு சேர்த்து மலேசியாவில் வெளிவரும் தமிழ் தினசரிகளின் எண்ணிக்கை 8 ஆக உயரும்.